ஸ்ரீ குலசேகராழ்வார் அருளிச்செய்த பெருமாள் திருமொழி திருவேங்கடம் - Perumal Thirumozhi Thiruvengadam

Описание к видео ஸ்ரீ குலசேகராழ்வார் அருளிச்செய்த பெருமாள் திருமொழி திருவேங்கடம் - Perumal Thirumozhi Thiruvengadam

திருவேங்கட மலைமேல் ஏதேனுமொன்றாகப் பிறக்க விரும்பிக் குலசேகராழ்வார் பாடிய திருமொழிப் பாடல்

இவருக்கு இறைவன் காட்சி தந்தமையால் இன்பமும், செல்வமும், அரசாட்சியும் தமக்கு வேண்டாமென்று துறவினை மேற்கொண்டார். இவர் பெரிய பெருமாளாகிய ராமபிரானிடத்தில் அன்பு பூண்டவரானதால் ‘குலசேகரப் பெருமாள்’ என்றே பெயர் வழங்கலாயிற்று.

சிங்க மராத்தியர்தம் கவிதைக் கொண்டு, சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்‘ என்னும் பாடலுக்கேற்ப்ப அங்கு யானைத்தந்தம் மட்டுமல்ல மாலின் மாலையாய் ஒரு மன்னவன் குலசேகரப் பெருமாள் அவதரித்துள்ளார்.

குலசேகர பெருமாள் சாதாரண மாந்தராய் மண்ணில் பிறக்கவில்லை. அவர் மூவேந்தர்களில் ஒருவரான சேரப் பேரரசின் செல்வக் குமரனாய் அவதரித்தார். அரச குடும்பத்தில் பிறந்த இவர், மன்னனாய், மண்ணைக் கைப்பற்றி வாழாமல், மாலவனின் மனதைக் கைப்பற்ற எண்ணி வாழ்ந்த உத்தமர்.

பாலகனாய் இருந்த காலத்திலே இவர் வேதங்கள், வெவ்வேறு மொழிகள் என்று கல்விகேள்விகளில் சிறந்து விளங்கியதோடல்லாமல், வாள் வீச்சு, அம்பெய்தல், குதிரையேற்றம், யானை ஏற்றம், தேரோட்டல், கதை, கம்பு, சிலம்பு என்று அனைத்திலும் அவர் வல்லவராய் இருந்தார். உரிய காலத்தில் அரச பதவியேற்ற இவர், செவ்வனே அரசாட்சி நடத்தி அனைவரின் அன்பையும் மதிப்பையும் பெற்றார். முகிலும் மாதம் மும்மாரி மாறாமல் பெய்து எல்லா நலமும், வளமும், செல்வமும் பெற்று சேரநாடு பொன்விளையும் பூமியாய் பொலிவுற்று விளங்கியது.

இவர் போர்க்களத்தில் சென்றால், வாகை மாலையன்றி வேறு எதையும் சூடமாட்டார். தன் தோள் வலிமையாலும், அறிவுக்கூர்மையினாலும், ஸ்ரீரங்கநாதரின் அருளினாலும் எதிரிகளைப் புறமுதுகிட்டு ஓடச்செய்தார். அவரது திறமையையும், பேராண்மையையும் கண்டு, பாண்டிய மன்னன் தன் மகளை அவருக்கு மணம் செய்து வைத்தார்.

வீட்டையும், நாட்டையும் கருத்துடன் ஆண்டு வந்த குலசேகரருக்கு, போரில் பல உயிர்கள் இறப்பது அவருக்கு வெறுப்பை உருவாக்க ஆரம்பித்தது. அதனால், நாளாக நாளாக அரச வாழ்வில் விருப்பங்குறைய ஆரம்பித்தது.

குலசேகர ஆழ்வார் வணங்கிய திருத்தலங்கள்;

திருவரங்கம், திருவேங்கடம், திருவித்துவக்கோடு,திருஅயோத்தி, திருக்கண்ணபுரம்,திருசித்திரக்கூடம்.

திருவரங்கம் சென்று திருவரங்கப் பெருமானை வாயார வாழ்த்தி நின்று தம் அனுபவத்தைப் பெருமாள் திருமொழியில் 31 பாசுரங்கள் பாடியருளினார். இவர் திருவேங்கடம், திருக்கண்ணபுரம் முதலான திருத்தலங்களையும் பாடியுள்ளார்.

பெருமாள் திருமொழியில் பத்து பாசுரங்கள் ராமபிரானுக்காகப் பாடப்படும் தாலாட்டுப் பாடல்களாக அமைந்துள்ளன. இதனிலுள்ள முதற்பாடல் தெய்வபக்தி உள்ள அத்தனை தமிழ்த்தாய்மார்களும் தங்கள் சேய்களுக்காகப் பாடியிருக்கக்கூடிய பாடல்:

மன்னு புகழ் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே
தென்னிலங்கைக் கோன் முடிகள் சிந்துவித்தாய் செம்பொன்சேர்
கன்னி நன்மா மதில் புடைசூழ் கணபுரத்து என் கருமணியே!
என்னுடைய இன்னமுதே இராகவனே! தாலேலோ!

குலசேகரப்படி

திருமலை ஆண்டவன் சன்னிதியில் ஆண்டவனின் பவளவாயை எக்காலும் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டுமென்றும், அதற்காக தன்னை அவர் கோயில் வாசற்படியாகவே வைத்துக்கொள்ளவேண்டுமென்றும் குலசேகரர் மனமுருக வேண்டிக்கொண்ட பாசுரம்:

செடியாய் வல்வினைகள் தீர்க்குந்திருமாலே
நெடியானே வேங்கடவா ! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவருமரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க்கிடந்துன் பவளவாய் காண்பேனே.

இதனால் இன்றும் வெங்கடேசப் பெருமாளின் வாசற்படிக்கு குலசேகரப்படி என்ற பெயர் வழங்குகிறது.

இவர் திருவேங்கடவனிடம் இவ்வாறு வேண்டிநின்றாலும் ஆண்டவன் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன் என்ற காரணத்தால் ஸ்ரீரங்கநாதன் கோயிலிலும் கர்ப்பகிருகம் முன்னிருக்கும் படி குலசேகரன் படி என்று அழைக்கப்படுவதைப் பார்க்கலாம்.

திருவரங்க பணி;

திருவரங்கம் பெரிய கோயிலில் மூன்றாவதாக இருக்கும் திருச்சுற்றிலே சேனைவென்றான் திருமண்டபம் என்பதைக் கட்டினார். இத்திருச்சுற்றையும் செப்பம் செய்தார். இதனாலேயே இம்மூன்றாவது சுற்றுக்கு இவரது பெயர் இன்றும் வழங்குகிறது. குலசேகராழ்வாரால் ”பவித்ரோற்சவ மண்டபம்” கட்டப்பட்டது. இந்த மண்டபம் உள்ள பிராகாரத்தை திருப்பணி செய்தவரும் இவரே!.

பல திருத்தலங்களுக்கும் சென்று கடைசியாக மன்னார்கோயில் திருத்தலம் வந்தார் குலசேகரர். அங்கே பெருமானின் நின்ற, இருந்த, கிடந்த கோலங்களைக் கண்ணாரக் கண்டு மகிழ்வெய்தி அங்கேயே முக்தியடைந்தார். அங்கே அவருக்கு தனி சந்நிதியும் இருக்கிறது. இந்தத் திருத்தலம் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்துக்கு அருகில் அமைந்துள்ளது.

குலசேகர ஆழ்வாரின் பிரபந்தப் பாசுரங்கள் ‘பெருமாள் திருமொழி’ என்று 105 பாடல்கள். ராமாவதாரத்தையும் கிருஷ்ணாவதாரத்தையும் சிறப்பிக்கும் பாடல்கள்.

தொடர்ந்து அரங்கன் அடியாரின் அடிமைத் திறத்தில் ஈடுபட்டும், அரங்கன் அடியாராய் உலகத்தாரொடும் பொருந்தாமல் தனித்திருக்கும் தன்மையுமாய் பத்துப் பத்துப் பாசுரங்கள் பாடுகிறார். இப்படி முப்பது பாசுரங்கள் அரங்கனைப் பாடிவிட்டு, பின்னர் திருவேங்கடமுடையான் பக்கலுக்குச் செல்கிறார் குலசேகராழ்வார்.

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ
வான்ஆளும் செல்வமும் மண்ணரசும் நான்வேண்டேன்
தேனார் பூஞ்சோலை திருவேங்கடச் சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே!

நான் தேவலோகத்திலே அரசனாக இந்திரனாக வாழ்ந்து அனுபவிக்கும் இந்திரபோகத்தை விரும்பவில்லை. இவ்வுலகம் முழுவதையும் ஆண்டு இன்பமடையும் அரசபோகத்தையும் விரும்பவில்லை. இத்தகைய இன்பங்கள் எல்லாவற்றையும்விட திருவேங்கடமலையில் உள்ள நீர்ச்சுனையில் ஒரு மீனாகப் பிறந்து திருவேங்கடமலையை விட்டுப் பிரியாமல் வாழவே விரும்புகிறேன் என்று வேண்டுகிறார்.

#mahavishnuinfo
#sarvamvishnumayam
#சுருதிமன்னர் #குலசேகர #பெருமாள்

Комментарии

Информация по комментариям в разработке