விழாக்கோலம் காணும் புங்குடுதீவு | நாடு திரும்பிய மைந்தர்கள் சொல்வதென்ன?

Описание к видео விழாக்கோலம் காணும் புங்குடுதீவு | நாடு திரும்பிய மைந்தர்கள் சொல்வதென்ன?

கால மாற்றங்களால் களவாட முடியாத புங்குடுதீவு வரலாறு - ஈழத்தின் மகுடம்.
இலங்கை சர்வதேச ரீதியாக புகழுடன் விளங்குவதற்கு இலங்கையில் நிலவியல் அமைப்பு ஓர் முக்கிய காரணமாகும். உலகளாவிய ரீதியில் அழகும் வளங்களும் ஒருங்கே அமையப்பெற்ற குட்டித் தீவான இலங்கையின் நிலப்பரப்புக்குள் பல தீவுகள் காணப்படுவதுடன் அவை இலங்கையின் புகழை வெளி உலகிற்கு பறை சாற்றும் முக்கிய அம்சங்களாக திகழ்கின்றன.

அதன்படி, ஈழத்தின் சப்த தீவுகள் என்று அழைக்கபடும் தீவுகளில் முக்கியமான, வளம் நிறைந்த போற்றுதற்குரிய குணாம்சங்கள் பலவற்றைக் கொண்டுவிளங்கும் ஒரு தீவாக புங்குடுதீவு விளங்குகிறது.

ஈழத் திருநாட்டின், யாழ்.மாவட்ட எல்லைப் பிரிவுக்குள் வரையறுக்கப்படும் புங்குடுதீவு 18 கிலோமீற்றர் நெடுஞ்சாலையின் மூலம் யாழ்நகரின் நிலப்பரப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

குடாக்கள், முனைகள் என பல குணாம்சங்களைக் கொண்டு விளங்கும் புங்குடுதீவின் சுற்றளவு 21 மைல்கள் என வரையறுக்கப்பட்டுள்ள அதேவேளை, கிழக்கு மேற்காக 5.5 மைல்கள் நீளமும் வடக்கு தெற்காக 3 மைல்கள் அகலமும் கொண்டு இத்தீவு விளங்குகிறது.

ஈழத்தின் தவிர்க்க முடியாத நிலப்பகுதிகளாக விளங்கும் தீவுகளில் ஏனைய பல தீவுகளைப் போலவே புங்குடுதீவும் கடலுக்கு மத்தியில் அமையப்பெற்ற ஒரு தனி நிலப்பகுதியாக இருக்கின்ற நிலையில், இத்தீவு வாணர் பாலத்துடன் இணைக்கப்பட்டு யாழ் யாழ்நகரின் நிலப்பகுதியுடன் தொடர்புபடுகிறது.

அது மட்டுமல்லாமல் குறிகாட்டுவான், கழுதைப்பிட்டி போன்ற துறைமுகத்தின் ஊடாக ஏனைய தீவுகளுடன் கடல்வழி தொடர்பைக் கொண்டிருக்கிறது புங்குடுதீவு.

புங்குடுதீவில், விவசாயம், கால்நடை வளர்ப்பு, கடல்வளங்கள், மீன்பிடி என்பன பிரதான வருமானம் பெறும் துறைகளாக காணப்படும் அதேவேளை, புங்குடுதீவு மண் இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கில் அதிகமான அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் நிலப்பகுதிகளில் ஒன்றாக விளங்குகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

புங்கை மரங்கள் இத்தீவில் செறிந்து காணப்பட்டமை இம்மண் "புங்குடுதீவு" எனப் பெயர் பெறுவதற்கான காரணம் என சொல்லப்படும் அதேவேளை, தமிழ்நாட்டில் உள்ள புங்குடி என்ற ஊரை தொடர்புபடுத்தி இம்மண்ணுக்கான பெயர் விளக்கம் கூறபடுவதும் உண்டு.

இதனைத் தாண்டி தமிழ்நாட்டின் மீதான அந்நியர்களின் படையெடுப்பின் போது மக்கள் இடம்பெயர்ந்து
பூங்கொடித் தீவு என அழைக்கப்பட்ட குறித்த தீவில் மக்கள் தஞ்சமடைந்ததாகவும், இப்பெயர் பின்னாட்களில் மருவி புங்குடுதீவு என பெயர் பெற்றதாகவும் ஒரு செவிவழி வரலாறு சொல்லப்படுகிறது.

வடக்கின் கடற்பரப்பில் உள்ள தீவுக்கூட்டங்களுடன் ஒப்பிடுகையில், புங்குடுதீவு மையத் தீவாக காணப்பட்டமையால் இத்தீவை ஒல்லாந்தர் மிடில்பேர்க் எனப் பெயரிட்டிருந்த அதேவேளை, ஒல்லாந்தர் காலனித்துவ காலப்பகுதியில் இத்தீவின் கடற்பரப்பில், எடுக்கப்பட்ட சங்குகளை பதம் பிரித்து ஏற்றுமதி செய்யும் இடமாக காணப்பட்ட பகுதி சங்குமாவடி என பெயர் பெற்றுள்ளது.

புங்குடுதீவின் வரலாறு கூறும் சான்று ஆதாரங்களின்படி, இதிகாசங்கள், புராணங்கள், பண்டைய அரேபிய, கிரேக்க, சீன நாடோடிக் கதைகள் உள்ளிட்டவற்றில் உள்ளீர்க்கப்பட்டுள்ள புங்குடுதீவு மண்ணின் பெருமைகள் இன்றும் செறிந்து போற்றப்பெறுகின்றன.

அதன்படி, பாளி மொழியில் எழுதப்பட்ட பண்டைய புத்த சாதகக் கதைகளில் ‘ இத்தீவு, பியங்குதீவு’ [Piyangudipa] என்றும்' புவங்குதீவு’ என்றும் அழைக்கப்படுகிறது.

அதே போன்று, கிரேக்க, சீன, அரேபிய நாடோடிக்கதைகள் புங்குடுதீவை, ‘குங்குமத்தீவு’ என விழித்துள்ள அதேவேளை, ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில் “ஈங்கிதன் அயலகத்து இரத்தினத் தீவத்து
ஓங்குயர் சமந்தத்து உச்சி மீமிசை” - (மணிமேகலை: 11: 21 – 22) எனும் வரிகளின் ஊடாக இத்தீவு ‘இரத்தினத் தீவகம்’ என குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அத்துடன், ‘நம்பொத்த’ என்ற சிங்கள நூல் புங்குடுதீவை ‘புயங்குதிவயின’ என சொல்வதாக ‘Nagadipa and Buddhist remains In Jaffna’ என்னும் நூலில் – Pieris. P. E என்பவர் எழுதியுள்ள அதேவேளை, ‘பியங்குதீப’ என்பது தற்கால புங்குடுதீவு என ‘Historical Topography of Ancient and Medieval Ceylon’ என்னும் நூலில் – Nicholas. C. W
என்பவர் குறிப்பிட்டுள்ளார். அவரே வல்லிபுரத்தில் கண்டெ டுக்கப்பட்ட பொன் தகட்டைப் பற்றி கூறும் இடத்தில் புங்குடுதீவை ‘குங்குமத்தீவு’ [Saffron Island] என்றும் கூறுகிறார்.

புங்குடுதீவை தாய் பூமியாக கொண்ட மண்ணின் மைந்தர்களும் மகள்களும் தற்காலத்தில் உலகின் பல நாடுகளிலும் செறிந்து வாழ்கின்றனர்.
ஈழப் போரட்டத்தில் 1990களிலான இடப்பெயர்வுகள் இம்மண்ணின் மக்களை இலங்கையின் பல பகுதிகளுக்கும் உலகின் பல நாடுகளுக்கும் இடம்பெயர காரணமாக அமைந்திருந்தன.

இவ்வாறு உலகின் பல நாடுகளில் செறிந்து வாழும் புங்குடுதீவு மண்ணின் மக்கள் வணிகத்துக்கும் உழைப்புக்கும் பெயர்பெற்றவர்களாக திகழ்கின்ற அதேவேளை, ஈழ விடுதலை போராட்டத்தின் பங்குதாரர்களாகவும், மொழி கலாசார, புலமைக்கு பங்களித்த மாமனிதர்களாகவும்; வாழ்ந்த வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களை பிரசவித்த பெருமைக்கும் உரித்தானது. இத்தனை மகுடங்களை தாங்கி நிற்கும் புங்குடுதீவு மண்ணின் பெருமைகளை காலத்தின் எந்த மாற்றங்களும் கவர்ந்துவிட முடியாது

Комментарии

Информация по комментариям в разработке