தமிழ்நாட்டில் தாய்மொழி தமிழில் மருத்துவக் கல்வியை கற்பிக்கலாம்-முன்னாள் எம்பி, மருத்துவர் செந்தில்

Описание к видео தமிழ்நாட்டில் தாய்மொழி தமிழில் மருத்துவக் கல்வியை கற்பிக்கலாம்-முன்னாள் எம்பி, மருத்துவர் செந்தில்

கல்வித்துறையில் நுழைவுத் தேர்வு மாநிலங்களின் உரிமைகளை பறிப்பதாக இருக்கிறது... தமிழ்நாட்டில் தாய்மொழி தமிழில் மருத்துவக் கல்வியை கற்பிக்க முடியும் - ஓசூர் புத்தக வெளியீட்டு விழாவில் முன்னாள் எம்பி, மருத்துவர் செந்தில் பேச்சு.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், "நீட் ஏன் கூடாது?" என்ற கருத்தியல் புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது. ஓசூரைச் சேர்ந்த கவிஞரும், எழுத்தாளருமான, இள. பிரபாகரன் அமுதன் எழுதிய இந்த புத்தகத்தை, தர்மபுரி முன்னாள் எம்பி மருத்துவர் செந்தில் வெளியிட்டார். அதனை, ஓசூர் மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் என்.எஸ். மாதேஸ்வரன் மற்றும் மாமன்ற உறுப்பினர் ஆர் செந்நீரப்பா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இதே போல அவர் எழுதியுள்ள, "அதையும் தாண்டி" என்ற கவிதை புத்தகத்தை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் டாக்டர் ஆர் எஸ் தமிழ்வேந்தன் வெளியிட்டார்.

நிகழ்ச்சிக்கு பின்பு செய்தியாளர்களிடம் தெரிவித்த மருத்துவர் செந்தில்,

இன்றைக்கு, ஒரே இந்தியா, ஒரே நாடு, ஒரே கல்விக் கொள்கை என்பது மாநில உரிமைகளை பறிக்கின்ற செயல். மத்திய அரசின் தலையீடு அதிகமாக உள்ள துறை கல்வி துறை.

கல்வித்துறையில் நுழைவுத் தேர்வு என்பது ஏறக்குறைய மாநிலங்களின் உரிமைகளை பறிப்பதாக இருக்கிறது. கல்வி சமத்துவத்தை நிலை நாட்டுவதற்கு பதிலாக வேறுபாடுகளை மிகுதி ஆக்குகின்ற முயற்சி.

இதை எதிர்கொள்ளவே நுழைவுத் தேர்வு வேண்டாம். அது மட்டும் போதாது.

ஒவ்வொரு மாநிலமும் தாய் மொழியில் தொழில் கல்வியை அறிமுகப்படுத்த வேண்டும் என்பது மிகவும் இன்றியமையாதது. மருத்துவத்தை கண்டிப்பாக தாய்மொழி தமிழில் கற்பிக்கலாம்.

இதற்கு இரண்டு சான்றுகள் உள்ளன. பிரான்ஸ் ஸ்பெயின் இத்தாலி கிரேக்கம் ஜெர்மனி, ஆகிய ஐரோப்பிய நாடுகளில் மருத்துவக் கல்வி அவரவர்கள் தாய் மொழியிலேயே கற்பிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டை ஒரு மாநிலமாக மட்டுமே பார்க்கக் கூடாது. எட்டு கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாடு மாநிலம், உலகத்தில் உள்ள பல ஐரோப்பிய நாடுகளை விட அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு நாடு.

தமிழ்நாட்டில் பொறியியல் மற்றும் மருத்துவம் கல்வியை தமிழில் கற்பிக்க முடியும். தற்போதைய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாயிலாக மொழிபெயர்ப்பது என்பது மிகவும் விரைவாக செய்ய முடியும்.

எனவே இந்த தொழில்நுட்பம் வாயிலாக மொழிபெயர்ப்பு என்பது எளிதாகி விட்டதால் தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் தாய் மொழியில் தொழில் வழி கல்வியை கற்பிக்க முடியும். அப்படி செய்தால் மட்டும்தான் அறிவு மேம்படும். உண்மையிலேயே அறிவை வளர்ப்பதற்கு மாறாக மதிப்பெண்களுக்காக மாணவர்களை வைத்து பயிற்றுவிக்கிறோம். இது இயந்திரங்களை உருவாக்குவது போன்றது.

இந்த நிலை மாற வேண்டுமானால், கண்டிப்பாக தாய் மொழி கல்வியை வளர்க்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம். புதிய தொழில்நுட்பங்கள் உள்ள இன்றைய சூழலில் நிச்சயம் இது முடியும் என்பதால் உடனடியாக தமிழகத்தில் தொடங்க வேண்டும்.

நேரடியாக மருத்துவத்துறையில் மாற்றத்தை செய்வதற்கு பதிலாக முதலில் துணை மருத்துவத்துறையில் தமிழில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். பிறகு காலப்போக்கில், முழு மருத்துவ கல்வியையும் தமிழில் மாற்றி அமைக்க முடியும். அதற்கான ஆய்வுகளை அரசு விரைவாக முன்னெடுக்க வேண்டும்.... என அவர் தெரிவித்தார்.

பேட்டி : மருத்துவர் இரா செந்தில், முன்னாள் எம்பி, தர்மபுரி.

Комментарии

Информация по комментариям в разработке