தேவாரம் - முளைத்தானை -சிவனடியை சிந்திப்பதால் கிடைக்கும் பயன்கள்-மனிதரனைவரும் ஓதவேண்டிய அற்புத பதிகம்

Описание к видео தேவாரம் - முளைத்தானை -சிவனடியை சிந்திப்பதால் கிடைக்கும் பயன்கள்-மனிதரனைவரும் ஓதவேண்டிய அற்புத பதிகம்

To Support, Kindly Subscribe this Channel.
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : ஆறாம் திருமுறை
பண் : திருத்தாண்டகம்
நாடு : பாண்டியநாடு
தலம் : ஆலவாய் (மதுரை)
திருச்சிற்றம்பலம்
1. எல்லாப் பொருள்களின் தோற்றத்திற்கும் தான் முன்னே நிற்பவனாய், செறிந்த சடைமுடிமேல் பிறையை வளைவாகச் சூடியவனாய், அசுரர்களுடைய மும்மதில்களையும் மேருமலையை வில்லாகவும் வாசுகி என்ற பாம்பினை நாணாகவும் கொண்டு கொடிய அம்பினாலே அழிந்து சாம்பலாகும்படி அழித்தவனாய், தூய முத்துப் போன்ற பற்களை உடைய உமாதேவியோடு விளையாடி மகிழ்ந்தவனாய் அழகிய மதுரை மாநகரத்து ஆலவாய் ஆகிய திருக்கோயிலில் உகந்தருளியிருக்கும் சிவபெருமானுடைய திருவடிகளையே தியானிக்கும் வாய்ப்பினை யான் பெற்றுள்ளேனே என்று தாம் பெற்ற பேற்றின் அருமையை உணர்ந்து கூறியவாறாம்.

2. தேவருலகிலுள்ள மேலாருக்கும் மேலாயவனாய், வானத்தில் உலவிய முப்புரங்களையும் அழித்தவனாய், வண்டுகளின் பண்ணோசை நிலைபெற்ற பசிய பொழில்களை உடைய பழன நகரில் உள்ளானாய், பசும் பொன்நிறத்தனாய், வெண்ணீறு அணிந்தவனாய், சடைக்கற்றைக்குள் அடங்கிய கங்கையை உடையவனாய், உமையோடு வெளிப்படையாக உடனாகியும் அவளைத் தன் உருவில் மறைத்தும் இருப்பவனாய்த் தெளிந்த ஞானம் உடையார் பலரும் தங்கியிருக்கும் தென் கூடல் ஆலவாயில் உள்ள சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

3. கங்கையை நீண்ட சடையில் தங்கச் செய்தவனாய், பின் பகீரதன் பொருட்டாக அதன் ஒரு பகுதியை நிலத்தின்கண் பெருகி ஓடவிட்டவனாய், பால், தயிர், நெய் என்பவற்றின் அபிடேகத்தைப் பலகாலும் உடையவனாய், பகை கொண்டு வந்த கொடிய கூற்றுவனைத் தண்டித்தவனாய், காற்றின் திரட்சியாய் மேகத்தின் உள்ளே இருந்து கொடிய இடியாக ஓசை எழுப்புபவனாய், நெற்றியின் கண் தீத்திரட்சி போன்ற கண்ணை உடையவனாய் உள்ள தென் கூடல் திருவாலவாய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

4. வான் உலகினையும் நிலவுலகினையும் தன் உடைமையாக உடையவனாய்ப் பாம்பினைக் கச்சாக அணிந்தவனாய் வலிய பேய்கள் சூழச்சுடுகாட்டில் கூத்தாட வல்லவனாய், தன் கடைக்கண்களால் உமாதேவியை நோக்கி அவள் பரிந்துரைத்த குறிப்பினையும் பெற்று என்பால் உள்ள குறைகளை எல்லாம் நீக்கினவனாய், அடியேன் உள்ளத்துள்ளே ஞானவடிவினனாய் நின்று தேன் போலவும் அமுது போலவும் இனியனாய் உள்ள தென் கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

5. கயிலை மலையை இருப்பிடமாக உடையவனாய், ஏழுலகமும் பரந்து இருப்பவனாய், ஒற்றைப்பிறையை அணிந்தவனாய், உமாதேவியை விடுத்து என்றும் நீங்காதவனாய், அடியார் அல்லாதார் நினைத்தற்கு அரியனாய், பேயோடு எந்நாளும் சுடுகாட்டில் கூத்தாடுதலில் தெவிட்டாதவனாய், தான் விடத்தை உண்டு அமரர்களுக்கு அமுதம் ஈந்தவனாய், வேதமந்திரங்களைக் கூறிப் பிரமனும் திருமாலும் துதிக்கும் புகழுடையவனாய் உள்ள தென் கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

6. யாவரினும் முற்பட்டவனாய், அடியார்கள் விரும்பிய வடிவில் காட்சி வழங்குபவனாய், என்றும் மூத்தலில்லாத திருமேனியை உடையவனாய், தானே மூவுலகம் முழுதும் பரவியிருப்பவனாய், அடியவர்களின் தீவினையைப் போக்குபவனாய், ஓவியத்து எழுதவொண்ணா அழகிய உமையோடு விரும்பி யிருப்பவனாய், தேவர்கள் நடுங்குதலைக் கண்டு கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு அமுதத்தை ஈந்த தேவனாய் உள்ள தென்கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப்பெற்றேன் நானே.

7. பற்றறுத்த சான்றோருக்குப் பற்றுக்கோடாகும் வழியாய் இருப்பவனாய், அடியார்களுடைய துன்பத்தைப் போக்கி அவர்களை ஆட்கொள்ளவல்லவனாய், இறந்தவர்களுடைய எலும்பையே அணிந்தவனாய், இரவில் கூத்தாடவல்லவனாய்த் தன்னை மறந்த அசுரர்களின் மும்மதில்களையும் அழித்தவனாய், வேறுபற்றில்லாத அடியார்களுக்கு என்றும் மேம்பட்டு அருளுபவனாய் உள்ள தென்கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

8. அடியார்களுடைய வாயுள்ளும் மனத்துள்ளும் மனத்தில் தோன்றும் எண்ணத்துள்ளும் தங்கி, அவர்களுடைய விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுபவனாய், மாசற்றவனாய், கலப்பற்ற வெள்ளை நிறக் காளையை உடையவனாய், பிறையைச் சடையில் சூடியவனாய், தொடர்ந்து எனக்குத் தாய்போல உதவுபவனாய்த் தவத்தின் பயனாக உள்ளவனாய், மேம்பட்ட தேவர்கள் தலைவராய திருமால் பிரமன் இந்திரன் முதலியவர்களுக்கு என்றும் சேய்மையிலுள்ளவனாய் இருக்கும் தென் கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

9. தீவினையாகிய இருளைப் போக்கும் ஞானச் சுடராய், அடியார்களின் பாவங்களைப் போக்குபவனாய்ப் பழி ஏதும் இல்லாதவனாய் நஞ்சினை உண்டு தேவர்க்கு அமுதம் ஈந்தவனாய்க் கிளைத்தெழுந்த தீயாகி அசுரருடைய மும்மதில்களையும் அழித்தவனாய், நடுவுநிலை தவறாதவனாய் எல்லா உயிர்களுக்கும் அருள் செய்பவனாய், மேலான ஒளிவடிவினனாய், விண்ணவர்களுக்கு மேலும் உயர்வுதரும் அப்பக்தியாய் உள்ளவனாய், மேம்பட்ட தேவர்களுக்கும் ஒளிகாட்டும் கலங்கரை விளக்காக உள்ள தென்கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

10. கயிலை மலையை உடையவனாய், மேரு மலையில் தங்கியிருப்பவனாய், வளர்ந்த செஞ்சடையினனாய், வானோருள் மேம்பட்டவனாய், என் தலையின் உச்சியில் என்றும் நிலைபெற்றிருப்பவனாய், எங்கும் தனக்கு நிகராவார் இல்லாதவனாய்த் தன்னை அணுகாது பகையைப்பூண்ட அசுரர் மதில்கள் மூன்றும் அழியுமாறு பயன்படுத்திய வில்லை உடையவனாய் இருக்கும் தென்கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

11. பிறன் மனைவியை விரும்பிய இராவணனுடைய தோள்களையும் பத்துத்தலைகளையும் நசுக்கியவனாய், பின் அவன் எழுப்பிய வீணை இசைகேட்டு அருள் செய்தவனாய் அருச்சுனனுடைய தொண்டினைக் கண்டு அவனுக்கு இரங்கிப் பாசுபதாத்திரம் ஈந்தவனாய், நம்பத்தகுந்தவனாய், அடியேன் மாட்டு அன்பு உடையவனாய், அளவற்ற பல ஊழிக்காலங்களையும் கண்டும் தன் நிலைபேற்றில் மாறுபடாது இருக்கும் பரிசுத்தனாகிய தென்கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

திருச்சிற்றம்பலம்

Комментарии

Информация по комментариям в разработке