வணக்கம்,
காந்தி கல்வி நிலையத்தின் புதன் வாசகர் வட்டத்தில் 04.09.2024 அன்று (மாலை 6.45-7.45)
பேசுபவர்:
திரு .மந்திரமூர்த்தி அழகு
புத்தகம்:
சமர்க்களம்
ஆசிரியர்:
திருமதி.கலைச்செல்வி
பேச்சாளர் பற்றி:
BSNL நிறுனத்தில் - DGM Marketing ஆக பணியாற்றி ஓய்வு பெற்றவர். BSNL-இல் பணியாற்றிய காலத்தில் மூன்று தென் மாநிலங்களில் பணியாற்றியதோடு, BSNL-அதிகாரிகள் தொழிற்சங்கத்தில் செயலர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்திருக்கிறார். ஆரம்ப காலம் முதல் மேடைப் பேச்சுகளில் ஆர்வம் மிக்கவராக இருந்திருக்கிறார். இளவயது முதல் தான் பங்கேற்றுப் பேசிய பல பேச்சுப் போட்டிகளில் சிறப்பாக உரையாற்றியமைக்காக தவத்திரு குன்றக்குடி அடிகளார், எழுத்தாளர் சுஜாதா, கி.ஆ.பெ விஸ்வநாதம், பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் உள்ளிட்ட தமிழகத்தின் பெரிய ஆளுமைகளிடம் பரிசுகள் பெற்றிருக்கிறார். தவத்திரு குன்றக்குடி அடிகளாருடன் ஒரே மேடையில் உரை ஆற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. நெல்லை சவேரியார் கல்லூரியில் தமிழ்சங்கச் செயலராக இருந்தபோது தமிழில் வெளியாகின்ற இதழ்களினுடைய கதைகளின் சுருக்கத்தை எழுதிப் பதிவு செய்து இருக்கிறார். 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் – ஆறு ஆண்டுகளாக - 'வாசிப்போம், தமிழ் இலக்கியம் வளர்ப்போம்' என்ற பெயரில் ஒரு வாசிப்புக் குழுவினை முகநூலில் நண்பர்கள் துணையுடன் ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார். தற்போது வாசிப்புக் குழுவில் 23,000 நண்பர்கள் இருக்கிறார்கள். குழுவில் இதுவரை 12,000 விமர்சனப் பதிவுகளுக்கும் மேலாக வெளியாகி உள்ளன. அதோடு மட்டுமல்லாமல், தன்னுடைய பெயரில் Youtube Channel ஒன்றையும் நடத்தி வருகிறார். அதன் மூலமும், வாசிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ்ச் சிறுகதைகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறார்.
நூல் பற்றி:
நூலாசிரியர் கலைச்செல்வி அவர்கள் சிறுகதைகள், நாவல்கள் என தொடர்ந்து புனைவுகளைப் படைத்து வருகிறார். அதிலும் குறிப்பாக காந்தியடிகள் குறித்து நாவல், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள் என தொடர்ந்து தனது படைப்புகளின் வழியே எழுதி வருகிறார். இந்நூலில், காந்தியடிகளின் வாழ்க்கையில் வெவ்வேறு கால கட்டங்களில் நடந்த சம்பவங்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ஒன்பது சிறுகதைகள் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன. நூலில் தனது உரையாக “என்னுடைய காந்தி” என்ற தலைப்பில் நூலாசிரியர் எழுதிய முன்னுரையில் இருந்தே நூலாசிரியர் தன்னுடைய மனதில் காந்தியடிகளுக்கு அளித்துள்ள இடத்தை நம்மால் உணர முடியும். எழுத்தாளர் பாவண்ணன் நூலுக்கு மிகச் சிறப்பானதொரு அறிமுக உரையை எழுதியுள்ளார். “எதிர் வெளியீடு” பதிப்பகத்தார் இந்நூலை வெளியிட்டுள்ளனர்.
ஆசிரியர் பற்றி :
தமிழ்நாடு அரசு ஊழியரான திருமதி.கலைச்செல்வி அவர்கள் தமிழின் கவனிக்கத் தக்க எழுத்தாளர்களுள் ஒருவர். “சக்கை”, “அற்றைத்திங்கள்”, “ஆலகாலம், “புனிதம்”, “ஹரிலால்” மற்றும் “தேய்புரி பழங்கயிறு” உள்ளிட்ட நாவல்களையும், “இரவு”, “வலி”, “சித்ராவுக்கு ஆங்கிலம் தெரியாது”, “மாயநதி” மற்றும் “கூடு” ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் எழுதியுள்ளார். குறிப்பிடத்தக்க வகையில் காந்தியக் கருத்துகளை மையமாகக் கொண்ட இலக்கியங்களை தொடர்ந்து படைத்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு (2024) “காந்தியைத் தவிர காந்தியை வேறு யாரால் கொல்ல முடியும்?” என்ற கட்டுரைத் தொகுப்பு ஒன்றையும், “சமர்க்களம்” என்ற சிறுகதைத் தொகுப்பு ஒன்றையும் எழுதியுள்ளார். இவரது படைப்புகளான “சக்கை” நாவல் மற்றும் “கூடு” சிறுகதை போன்றவை கல்லூரிகளில் பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன. திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றத்தின் அழகியநாயகியம்மாள் விருது, திருப்பூர் அரிமா சங்கத்தின் சக்தி விருது, புதுக்கோட்டை புத்தகக் கண்காட்சி விருது, இலக்கியச் சிந்தனை விருது, “தாழ்வாரம்“ சிறந்த சிறுகதைத்தொகுப்புக்கான விருது, கணையாழி சிறுகதைக்கான ஸ்பேரா விருது என பல விருதுகளைப் பெற்றவர்.
தொடர்புக்கு:
காந்தி கல்வி நிலையம்,
தக்கர் பாபா வித்யாலயா வளாகம்,
58 வெங்கட் நாராயணா சாலை, தி.நகர்,
சென்னை – 600017
தொடர்புக்கு: 9790740886 (ம) 9952952686
Информация по комментариям в разработке