🔴LIVE | 07.08.2024 | புதன் திருப்பலி | புனித கார்மேல் மலை மாதா திருத்தலம் இளையாங்கண்ணி

Описание к видео 🔴LIVE | 07.08.2024 | புதன் திருப்பலி | புனித கார்மேல் மலை மாதா திருத்தலம் இளையாங்கண்ணி

திருப்பலி வாசகங்கள் – ஆகஸ்ட் 7, 2024
பொதுக்காலம் 18ஆம் வாரம் – புதன்
புனித கயத்தான் – மறைப்பணியாளர் (வி.நினைவு)
புனிதர்கள் திருத்தந்தை இரண்டாம் சிக்ஸ்து, தோழர்கள் – மறைச்சாட்சியர் (வி.நினைவு)
பொதுக்காலம் 18ஆம் வாரம் – புதன்
முதல் வாசகம்

உனக்கு நான் முடிவில்லாத அன்பு காட்டியுள்ளேன்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 31: 1-7

ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: “அக்காலத்தில் இஸ்ரயேலின் குடும்பங்கள் எல்லாவற்றுக்கும் நான் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்.”

ஆண்டவர் கூறுவது இதுவே: “வாளுக்குத் தப்பிப் பிழைத்த மக்கள் பாலைநிலத்தில் என் அருளைக் கண்டடைந்தனர்; இஸ்ரயேலர் இளைப்பாற விரும்பினர். ஆண்டவர் அவர்களுக்குத் தொலையிலிருந்து தோன்றினார். உனக்கு நான் முடிவில்லாத அன்பு காட்டியுள்ளேன்; எனவே பேரன்பால் உன்னை ஈர்த்துள்ளேன். கன்னிப் பெண்ணாகிய இஸ்ரயேலே! உன்னை நான் மீண்டும் கட்டி எழுப்புவேன்; நீயும் கட்டி எழுப்பப்படுவாய்; மீண்டும் உன் மேளதாளங்களை நீ எடுத்துக் கொள்வாய்; மகிழ்ச்சியுற்றோர் போல நடனம் ஆடிக்கொண்டு நீ வெளியேறுவாய்; சமாரியாவின் மலைகள்மேல் திராட்சைத் தோட்டங்களை நீ மீண்டும் அமைப்பாய்; தோட்டக்காரர் பயிரிட்டு விளைச்சலை உண்டு மகிழ்வர். ஏனெனில் ஒரு நாள் வரும்; அப்பொழுது எப்ராயிம் மலையில், ‘எழுந்திருங்கள்; நாம் சீயோனுக்குப் போவோம்; நம் கடவுளாகிய ஆண்டவரிடம் செல்வோம்’ என்று காவலர்அழைப்பு விடுப்பர்.”

ஆண்டவர் தொடர்ந்து கூறுகிறார்: “யாக்கோபை முன்னிட்டு மகிழ்ந்து பாடுங்கள்; மக்களினத் தலைவனைக் குறித்து ஆர்ப்பரியுங்கள்; முழக்கம் செய்யுங்கள், புகழ்பாடுங்கள்; ‘ஆண்டவர் இஸ்ரயேலில் எஞ்சியோராகிய தம் மக்களை மீட்டருளினார்! ‘ என்று பறைசாற்றுங்கள்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

எரே 31: 10. 11-12ab. 13 (பல்லவி: 10d)

பல்லவி: ஆயர் தம் மந்தையைக் காப்பதுபோல் ஆண்டவர் நம்மைக் காத்தருள்வார்.

10மக்களினத்தாரே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்; தொலையிலுள்ள கடலோரப் பகுதிகளில் அதை அறிவியுங்கள்; ‘இஸ்ரயேலைச் சிதறடித்தவரே அதைக் கூட்டிச் சேர்ப்பார்; ஆயர் தம் மந்தையைக் காப்பதுபோல் அதைக் காப்பார்’ என்று சொல்லுங்கள். – பல்லவி
11ஏனெனில், யாக்கோபை ஆண்டவர் மீட்டார்; அவனிலும் வலியவன் கையினின்று அவனை விடுவித்தார்.12abஅவர்கள் வந்து சீயோனின் உச்சியில் பாடி மகிழ்வார்கள்; தானியம், திராட்சை இரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், கன்றுகாலிகள் ஆகிய ஆண்டவரின் கொடைகளை முன்னிட்டுப் பூரிப்படைவார்கள். – பல்லவி

13அப்பொழுது கன்னிப் பெண்கள் நடனம் ஆடிக் களித்திருப்பர்; அவ்வாறே இளைஞரும் முதியோரும் மகிழ்ந்திருப்பர்; அவர்களுடைய அழுகையை நான் மகிழ்ச்சியாக மாற்றுவேன்; அவர்களுக்கு ஆறுதல் அளிப்பேன்; துன்பத்திற்குப் பதிலாக இன்பத்தை அருள்வேன். – பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 7: 16

அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

அம்மா, உமது நம்பிக்கை பெரிது.

✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 21-28

அக்காலத்தில்

இயேசு தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார். அவற்றின் எல்லைப் பகுதியில் வாழ்ந்துவந்த கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, “ஐயா, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்” எனக் கதறினார். ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை.

சீடர்கள் அவரை அணுகி, “நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும்” என வேண்டினர். அவரோ மறுமொழியாக, “இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்” என்றார்.

ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, “ஐயா, எனக்கு உதவியருளும்” என்றார். அவர் மறுமொழியாக, “பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல” என்றார். உடனே அப்பெண், “ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே” என்றார்.

இயேசு மறுமொழியாக, “அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்” என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

Комментарии

Информация по комментариям в разработке