பெருநகர சென்னை மாநகராட்சி, சோழங்கநல்லூர் மண்டலம் (மண்டலம்-15)
198வது வார்டில்...
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
தமிழ்நாடு அரசின், முதல்வரின் முகவரித் துறை சார்பில், பெருநகர சென்னை மாநகராட்சி, சோழங்கநல்லூர் மண்டலம் (மண்டலம்-15) 198வது வார்டில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் 24.09.2025 புதன்கிழமை அன்று, கிராம நெடுஞ்சாலையில் உள்ள செல்லியம்மன் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த முகாமினை சோழங்கநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லயன் ச.அரவிந்த் ரமேஷ் தொடங்கி வைத்து, பார்வையிட்டு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, ஆய்வு மேற்கொண்ட அவர், அங்கிருந்த அரசு அலுவலர்களிடம் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் குறித்து, இதுவரை எத்தனை மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது என்று கேட்டறிந்தார். பின்னர், தீர்வு காணப்பட்ட மனுக்களின் பயனாளிகளுக்கு அதற்கான சான்றிதழ்களை வழங்கினார்.
இதில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, எரிசக்தி துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை உள்ளிட்ட 13 துறைகள், 43 சேவைகள் சார்ந்த உயரதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து அவர்களது கோரிக்கைகளை மனுக்களாக பெற்றுக் கொண்டனர்.
இந்த முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களில் உரிய தீர்வு காணப்படும் என்று அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் தெரிவித்தனர்.
இந்த முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிற்கான ஒருங்கிணைப்பு பணிகள் அனைத்தையும் திமுக-வின் 198 வது வார்டு, வட்ட கழகச் செயலாளர் தேவகுமாரர் சிறப்பாக செய்திருந்தார்.
இந்த முகாமில் சோழங்கநல்லூர், 15வது மண்டலக்குழு தலைவர் மற்றும் மாமன்ற உறுப்பினர் வி.இ.மதியழகன் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 198-வது வட்டக் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு முகாமினை சிறப்பித்தனர்.
Информация по комментариям в разработке