FOR APPOINTMENT PLEASE CALL 7708873905/9789168398
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சிவ தலமான
நாகராஜன் வழிபட்டு சாபவிமோசனம் பெற்ற தலமான
#நாகூர் என்ற #திருநாகூர்
#திருநாகநாதசுவாமி
#திருநாகவல்லிஅம்மன் திருக்கோயில் வரலாறு:
தொன்மை இனமான நாகர்கள் வாழ்ந்து, ஆட்சி செய்த இடங்களாக அறியப்படும் பகுதிகளில் குறிப்பிடத் தக்கவை நாகப்பட்டினம் மற்றும் நாகூர். நாகர் ஊர் என்ற பெயர் நாகூராக மருவியிருக்கலாம் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கூற்று. இந்த வரலாற்றுக் கூற்றை ஆன்மிக ரீதியாக உறுதி செய்வதாக உள்ளது, நாகராஜன் வழிபட்டு சாப விமோசனம் பெற்றதாகக் கூறப்படும் நாகூர் அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயில்.
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறந்து விளங்கும் தலங்களில் ஒன்றாகவும், காசிக்கு இணையானதாகவும், ராகு, கேது, காலசர்ப்ப தோஷ நிவர்த்தி தலமாகவும், இந்திரன், சந்திரன், நாகராஜன், சமுத்திரராஜன், துர்வாச முனிவர் மற்றும் சப்த ரிஷிகள், யுகங்கள்தோறும் வழிபட்ட தலமாகவும் விளங்குகிறது நாகூர் ஸ்ரீ நாகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ நாகநாத சுவாமி திருக்கோயில்.
மூலவர்: நாகநாதசுவாமி
உற்சவர்: சந்திரசேகரர்_ கல்யாண சுந்தரர்
அம்மன்: நாகவல்லி அம்மன்
தல விருட்சம்: புன்னை மரம்
தீர்த்தம்: சந்திர புஷ்கரணி
புராண
பெயர்: புன்னகாவனம்
ஊர்: நாகூர்
மாவட்டம்: நாகப்பட்டினம்
மாநிலம்: தமிழ்நாடு
புன்னாகவனம், சந்திர தீர்த்தம், உருத்திர நதி, சுப புண்ணிய மலை, விசுவகன்மிய விமானம் என்ற ஆறு மங்கலங்களும் பொருந்திய மகாதலம் என்ற சிறப்புப் பெற்றது இத்தலம்.
இங்கு, இறைவன் ஸ்ரீ நாகநாதர் என்ற திருப்பெயரில் காட்சியளிக்கிறார். அம்பாள் ஸ்ரீ நாகவல்லி என்ற திருப்பெயருடன் தெற்கு நோக்கி, தனி சன்னதி கொண்டு காட்சியளிக்கிறார். ஐந்து நிலைகளைக் கொண்ட ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி அமையப் பெற்றுள்ளது இக்கோயில். சுவாமியின் வலப்புறத்தில் ஸ்ரீ சந்திரசேகரர், கல்யாணசுந்தரர் (உற்சவர்), தியாகராஜர், இடப்புறத்தில் காட்சிக் கொடுத்த நாயனார், ஸ்ரீ நடராஜர், ஸ்ரீ ஐயப்பன் ஆகியோர் தனி சன்னதிகளில் காட்சியளிக்கின்றனர்.
முதல் சுற்று பிராகாரத்தில் தட்சிணாமூர்த்தி, நாகர்கள், வலம்புரி விநாயகர், சுப்பிரமணியர், அண்ணாமலையார், சண்டிகேசுவரர் மற்றும் ஸ்ரீ காசி விசுவநாதர் தனி சன்னதிகளில் காட்சியளிக்கின்றனர்.
மேற்குப் புறத்தில் ஜூரதேவர், ஈசான லிங்கம், தத்புருஷ லிங்கம், அகோர லிங்கம், வாமதேவ லிங்கம், ஸ்ரீ ஐவேலி நாதர், மகாலட்சுமி மற்றும் நால்வரும் கோயிலின் கன்னி பாகத்தில் ஸ்ரீ நாககன்னி மற்றும் ஸ்ரீ நாகவல்லி சமேதராக ஸ்ரீ ராகு பகவானும் காட்சியளிக்கின்றனர்.
கோயிலின் முன் மண்டபத்தில் அமையப் பெற்றுள்ள சிவபூஜை செய்யும் நாகராஜன் சிலை, தல வரலாற்றை உணர்த்துவதாக உள்ளது. இக்கோயிலின் தல விருட்சமாகக் கோயில் பிரகாரத்தில் புன்னாகவனம் அமைந்துள்ளது. அதனைச் சுற்றி நாகர்கள், நாககன்னிகள் சிலைகள் அமையப் பெற்றுள்ளன. ஸ்ரீ மகாவிஷ்ணுவுக்கு இறைவன் சிவபெருமான் இத்தலத்தில் வைகாசி மாதம் பௌர்ணமி நட்சத்திர நாளில் காட்சியளித்தார் இடம், இந்தப் புன்னாகவனம் எனக் குறிப்பிடப்படுகிறது.
பிரம்ம தேவரின் ஆலோசனைப்படி, சந்திர பகவான் இத்தலத்தில் நாகநாத சுவாமியை வழிபட்டு சாப விமோசனம் பெற்றதுடன், இங்கு தங்கியிருந்து ஆனி மாத பௌர்ணமியையொட்டி 10 நாள்கள் விழா எடுத்துள்ளார் என்ற ஐதீகம் உள்ளது. இத்தலத்தின் தீர்த்தம் சந்திரனால் உருவாக்கப்பட்டதாகவும், அதனால் சந்திர தீர்த்தம் என்ற பெயர் விளங்குவதாகவும் தல புராணத்தில் குறிப்பிடப்படுகிறது.
இதேபோல, இந்திரன் இத்தலத்தில் நாகநாத சுவாமியை வழிபட்டு 10 நாள்கள் விழா எடுத்து சாப விமோசனம் பெற்றார் எனவும், நாகராஜன், சமுத்திரராஜன் ஆகியோரும் இத்தலத்தில் தங்கியிருந்து நாகநாத சுவாமிக்கு விழா எடுத்துள்ளனர் எனவும் தல வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.
நாகராஜன் சாப விமோசனம் :
தவத்தில் சிறந்து விளங்கிய சம்புபத்தன் என்பவரும் அவரது மனைவி மற்றும் 5 வயது மகனும் காட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். சம்புபத்தனின் மகன் ஒரு நாள் காட்டில் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். அப்போது, அந்தக் காட்டில் நாகராஜனும் அவனது மனைவியும் இணைந்திருப்பதை அந்தச் சிறுவன் கண்டுவிட்டான். இதையறிந்த நாகராஜன், தன் முன்வினையின் காரணமாக, சம்புபத்தனின் மகனைத் தீண்டினான். நாகராஜனின் கொடிய விஷத்தால் தீண்டப்பட்ட அந்தச் சிறுவன் அங்கேயே மாண்டான்.
விளையாடச் சென்ற தன் மகன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததையடுத்து, சம்புபத்தன் தன் மகனைத் தேடி அலைந்தான். அப்போது, காட்டில் தன் மகன் இறந்து கிடப்பதைப் பார்த்தான். தன் மகன் விஷம் தீண்டி இறந்ததற்கு நாகராஜனே காரணம் என்பதைத் தன் தவ வலிமையால் அறிந்த சம்புபத்தன், நாகராஜன் நாகலோகத்தை விட்டு நீங்கி, வலிமையற்றுத் தனிமைப்பட்டவனாய் காட்டில் திரியச் சாபமிட்டான்.
Информация по комментариям в разработке