அனைவருக்கும் வணக்கம். அண்ட சராசரங்களையும் காக்கும் அன்னை பராசக்திக்கு உரிய புனிதமான ஆடி மாதத்தில், நம் ஆலயஓம் சேனலில், புகழ் பெற்ற சில அம்மன் கோயில்களை தரிசித்து வருகிறோம். அந்த வரிசையில், இன்றைய பதிவில், நாம் தரிசிக்க இருப்பது அரக்கோணத்தில், பள்ளூர் கிராமத்தில் அமைந்துள்ள சுமார் 1000 வருடங்கள் பழமையான வாராஹி அம்மன் திருக்கோயில். இத்திருத்தலத்தில் மூலவராக குடிகொண்டிருக்கும் வாராஹி அம்மன், ஆதி பராசக்தியின் தலைமை படை அதிகாரியாகவும், சப்த மாதாக்களில் ஒருவளாகவும் திகழ்கிறாள். வாராஹி அம்மன், பில்லி சூனியம், ஏவல், கண் திருஷ்டி போன்ற தீய சக்திககளை விரட்டும் ஆற்றல் மிக்கவளாக விளங்குகிறாள். மேலும் மன நோய், எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள், வாகன விபத்துகள் போன்றவற்றில் இருந்து மக்களை காத்து அருள்கிறாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பிரார்த்தனை சிறப்பு: பொதுவாக தெற்குத் திசையை நோக்கி அமைந்திருக்கும் அம்மன் கோயில்கள் சிறந்த பரிகார தலங்கள் என்பது ஐதீகம். இத்திருத்தலத்தில், ஆலய கோபுரம் மற்றும் வாராஹி அம்மனும் தெற்கு நோக்கி இருப்பதால், இந்த ஆலயம் மிக சிறந்த பரிகார தலம் என்பதில் சந்தேகமே இல்லை. செவ்வாய், வெள்ளி, ஞாயிற்று கிழமைகள், பஞ்சமி, அம்மாவாசை, பவுர்ணமி மற்றும் கரி நாட்களில் இங்கு வழிபடுவது விசேஷம். இப்போது, இத்தலத்தில் நடைபெறும் பலவிதமான பரிகார பூஜைகள் பற்றி பார்ப்போம்.
இங்கு அனைத்து பக்தர்களும் பிரதானமாக வழிபடும் முறை சற்று வித்தியாசமாக உள்ளது. பக்தர்கள் வாராஹி அம்மனின் கருவறை மண்டபத்திற்கு முன்பு வாழை இலையில் அரிசியைப் பரப்பி, தேங்காயை இரண்டாக உடைத்து அதை அரிசியின் மேல் வைத்து, அதில் நெய் ஊற்றி தீபமேற்றி வழிபடுகின்றனர். இப்படி வழிபடுவதால், அன்னை வாராஹி மனம் குளிர்ந்து பக்தர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருவாள் என்பது நம்பிக்கை. குறிப்பாக பஞ்சமி தினங்களில் விரதம் இருந்து, இந்த வழிப்பாட்டை மேற்கொண்டால் நல்ல வேலை, தொழிலில் முன்னேற்றம், எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி ஏற்படும். எதிரிகளின் தொல்லைகள் நீங்கும்.
தோல் எடுக்காத முழு கறுப்பு உளுந்தில் வடை செய்து வாராஹி அம்மனுக்குப் படைத்தால் மன நோய்கள், ஏவல், பில்லி சூன்யம் போன்றவை நீங்குகின்றன. குறிப்பாக அம்மாவாசை அல்லது பவுர்ணமி நாட்களில் செய்வது சிறப்பு. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், செவ்வாய்க்கிழமை அல்லது மற்ற நாட்களில் செவ்வாய் ஓரையில், அம்மனுக்கு சிவப்பு நிற வஸ்திரம் அணிவித்து, செம்மாதுளை முத்துக்களால் அர்ச்சனை செய்தால் செவ்வாய் தோஷம் நீங்கி தடைபட்ட திருமணம் விரைவில் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கரிநாளில், அம்மனுக்கு ஒன்பது இளநீரால் அபிஷேகம் செய்து செவ்வரளிப்பூ சாற்றி, செம்மாதுளை முத்துக்களால் அர்ச்சனை செய்தால், குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி, முன்னேற்றங்கள் ஏற்படும்.
ஆலய நடை திறப்பு: காலை 8 மணி முதல் பகல் 12.30 மணி வரை மற்றும் மாலை 4.30 முதல் இரவு 7.30 மணி வரை.
சென்னையிலிருந்து சுமார் 78 கிலோ மீட்டர் தூரத்தில் அரக்கோணம், பள்ளூர் கிராமத்தில் வராஹி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணம் செல்லும் சாலையில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் பள்ளூர் கிராமம் உள்ளது. திருமால்பூர் ரயில் நிலையத்திற்கு அருகில் பள்ளூர் உள்ளது.
Информация по комментариям в разработке