தொல்காப்பியச் சிறப்புகள் – முதுமுனைவர் இரா. இளங்குமரனாருடன் சிறப்பு நேர்காணல்

Описание к видео தொல்காப்பியச் சிறப்புகள் – முதுமுனைவர் இரா. இளங்குமரனாருடன் சிறப்பு நேர்காணல்

முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்கள் தொல்காப்பியம், சங்க நூல்கள், திருக்குறள், காப்பிய நூல்கள் உள்ளிட்ட தமிழ் நூல்களில் பெரும்புலமை பெற்றவர். வாழும் வள்ளுவராக நம் காலத்தில் விளங்கும் இப்பெருமகனாரின் தொடர்பு சற்றொப்ப இருபத்தேழு ஆண்டுகளாக எனக்கு உண்டு. யான் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருந்தபொழுது(1993-97) புலவர் அவர்களின் அல்லூர் திருக்குறள் தவச்சாலையில் அமைந்திருந்த பாவாணர் நூலகத்தை நன்கு பயன்படுத்தியுள்ளேன். நேரிலும், பொழிவுகளிலும் இவர்களிடம் யான் பெற்ற தமிழ்ச்செல்வம் வரம்பிட்டுச் சொல்ல இயலாது.

“தனக்குவமை இல்லாத தனிப்பெரு நூல்” என்ற தலைப்பில் தொல்காப்பியம் பற்றி இவர் வரைந்துள்ள நூல் தமிழ் உணர்வாளர்களுக்குப் படைக்கருவியாகும். தொல்காப்பியம் சார்ந்து நிறைய நூல்களை வரைந்த முதுமுனைவர் இரா. இளங்குமரனாரை 21.03.2017 இல் மதுரை, நான்காம் தமிழ்ச்சங்க நிகழ்வொன்றில் கண்டு உரையாடினேன். பெரும்புலவர் இரா. இளங்குமரனார் அவர்கள் தம் முதுமைக் காலத்திலும் தொல்காப்பியச் சிறப்பினை எடுத்துரைத்த பாங்கினை வியந்து கேட்டேன். தொல்காப்பியத்திற்கும் திருக்குறளுக்கும் அமைந்துள்ள உறவுகளை நம் ஐயா அவர்கள் மிகச் சிறப்பாக எடுத்து விளக்கினார்கள். “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்னும் நோக்கில் புலவர்பெருமானின் அரிய உரையினை ஒளிப்பதிவாக்கி, உலகத் தமிழர்களின் பெருஞ்சொத்தாக இக்காணொளியைப் படைப்பதில் பேருவகை அடைகின்றேன்.

முதுமுனைவர் இரா. இளங்குமரனாரின்மேல் அன்புகொண்ட தமிழ்த் தொண்டர்கள் இக்காணொளியை வரவேற்றுப் போற்றுவார்கள் என்று உறுதியாக நம்புகின்றேன். உண்மைத் தமிழ் உணர்வாளர்கள் இதனைக் கேட்டு, என் முயற்சியை ஊக்கப்படுத்துவார்கள் என்பதும் என் நம்பிக்கை. தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வழிவகைகளைச் செய்வோம். இணையப் பெருவெளியில் தமிழ்வளங்களைக் கொண்டுசேர்ப்போம்! வாரீர்!

Комментарии

Информация по комментариям в разработке