திருஅங்கமாலை
அருளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : நான்காம் திருமுறை
பண் : சாதாரி
நாடு / தலம் : பொது
பதிக விளக்கம்:
இந்த திருப்பதிகம் “திருஅங்கமாலை” என அழைக்கப்படுவதற்குக் காரணம், உடலின் ஒவ்வொரு உறுப்பையும் இறைபணிக்காக நல்வழியில் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை எடுத்துரைக்கும் தன்மை.
உயிர், தன்னுடைய வினைகளைத் தானாகவே கழிக்க முடியாது. எனவே, உடலின் உறுப்புகளை இறைபணியில் ஈடுபடுத்தி, அந்த வினைகளை நீக்க முயற்சிக்க வேண்டும் என்பது இப்பதிகத்தின் மையக் கருத்தாகும்.
பாடல் : 01
தலையே நீ வணங்காய் - தலை மாலை தலைக்கு அணிந்து
தலையாலே பலி தேரும் தலைவனை தலையே நீ வணங்காய்.
பாடல் விளக்கம்:
தலைகளால் ஆகிய மாலையைத் தலையில் அணிந்து மண்டையோட்டில் பிச்சைக்கு உலாவும், தலைவனைத் தலையே நீ வணங்குவாயாக.
பாடல் : 02
கண்காள் காண்மின்களோ - கடல் நஞ்சு உண்ட கண்டன் தன்னை
எண்தோள் வீசி நின்று ஆடும் பிரான் தன்னை கண்காள் காண்மின்களோ.
பாடல் விளக்கம்:
கண்களே, பாற்கடலில் எழுந்த நஞ்சினை உண்டதால் நீலநிறம் கொண்ட கழுத்தை உடையவனும், எட்டு தோள்களை வீசி நின்றாடுபவனும் ஆகிய சிவபிரானை நீங்கள் காணுங்கள்.
பாடல் : 03
செவிகாள் கேண்மின்களோ - சிவன் எம்மிறை செம்பவள
எரி போல் மேனிப் பிரான் திறம் எப்போதும் செவிகாள் கேண்மின்களோ.
பாடல் விளக்கம்:
செவிகளே, எமது தலைவனாகிய சிவபெருமான், செம்பவளம் போன்றும் தீயினைப் போன்றும் சிவந்த நிறம் கொண்டவர். பெருமைக்குரிய அவரது பண்புகளையும், செயல்களையும் எப்போதும் நீங்கள் கேளுங்கள்.
பாடல் : 04
மூக்கே நீ முரலாய் - முதுகாடு உறை முக்கணனை
வாக்கே நோக்கிய மங்கை மணாளனை மூக்கே நீ முரலாய்.
பாடல் விளக்கம்:
மூக்கே, சுடுகாட்டில் உறைபவனும், வேதங்களின் பொருளை மிகவும் கவனமாக கேட்டு உணர்ந்த பார்வதி தேவியின் மணாளனும், ஆகிய முக்கண்ணனின் பெருமைகளை நீ எப்பொழுதும் போற்றி ஒலிப்பாயாக.
பாடல் : 05
வாயே வாழ்த்துக் கண்டாய் - மதயானை உரி போர்த்து
பேய் வாழ் காட்டகத்து ஆடும் பிரான் தன்னை வாயே வாழ்த்து கண்டாய்.
பாடல் விளக்கம்:
வாயே, மதயானையின் தோலினை உரித்து அதன் பசுமையான தோலினை தனது உடலில் போர்த்துக் கொண்டவரும், பேய்கள் வாழும் காட்டில் விருப்பமுடன் நடமாடுபவரும் ஆகிய பெருமானை, நீ எப்போதும் வாழ்த்துவாயாக.
பாடல் : 06
நெஞ்சே நீ நினையாய் - நிமிர் புன்சடை நின்மலனை
மஞ்சாடும் மலை மங்கை மணாளனை நெஞ்சே நீ நினையாய்.
பாடல் விளக்கம்:
நெஞ்சமே, மேல் நோக்கிய செஞ்சடை உடைய நின்மலனை, மேகங்கள் தவழும் இமயமலையின் மகளாகிய பார்வதி தேவியின் கணவனை, நீ எப்பொழுதும் நினைப்பாயாக.
பாடல் : 07
கைகாள் கூப்பித் தொழீர் - கடி மாமலர் தூவி நின்று
பைவாய்ப் பாம்பு அரை ஆர்த்த பரமனைக் கைகாள் கூப்பித் தொழீர்.
பாடல் விளக்கம்:
கைகளே, படம் எடுக்கும் பாம்பினைத் தனது இடுப்பில் கச்சையாக இறுகக் கட்டிய பிரானை. நறுமணம் கமழும் சிறந்த மலர்களைத் தூவி, கைகளைக் கூப்பித் தொழுவீர்களாக.
பாடல் : 08
ஆக்கையால் பயன் என் - அரன் கோயில் வலம் வந்து.
பூக் கையால் அட்டிப் போற்றி என்னாத இவ் ஆக்கையால் பயன் என்.
பாடல் விளக்கம்:
சிவபெருமான் உறையும் கோயிலை வலம் வந்து, பூக்களைக் கையால் இறைவனின் திருமேனி மேல் தூவி அவனை வணங்காத உடம்பினால் நமக்கு பயன் ஏதும் இல்லை.
பாடல் : 09
கால்களால் பயன் என் - கறைக் கண்டன் உறை கோயில்
கோலக் கோபுரக் கோகரணம் சூழாக் கால்களால் பயன் என்.
பாடல் விளக்கம்:
அழகான கோபுரத்தை உடைய, நீலகண்டனாகிய எம்பெருமான் உறையும், கோகர்ணம் என்று அழைக்கப்படும் தலத்தில் உள்ள திருக்கோயிலை வலம் வராத கால்களால் என்ன பயன்.
பாடல் : 10
உற்றார் ஆர் உளரோ - உயிர் கொண்டு போம் பொழுது
குற்றாலத்து உறை கூத்தன் அல்லால் நமக்கு உற்றார் ஆர் உளரோ.
பாடல் விளக்கம்:
நாம் இறக்கும் தருவாயில், நம்மைச் சுற்றியுள்ள உறவினர்கள் எவரும் உதவமுடியாத நிலையில் இருப்பதால், அவர்கள் எவரையும் உற்றார்களாக கருதமுடியாது. அந்த சமயத்தில், குற்றாலத்தில் உறையும் கூத்தன் தவிர, வேறு எவரும் நமக்கு உதவி செய்யக்கூடிய உற்றார் இல்லை.
பாடல் : 11
இறுமாந்து இருப்பன் கொலோ - ஈசன் பல்கணத்து எண்ணப்பட்டுச்
சிறுமான் ஏந்தி தன் சேவடிக் கீழ்ச் சென்று அங்கு இறுமாந்து இருப்பன் கொலோ.
பாடல் விளக்கம்:
தாருகவனத்து முனிவர்கள் ஏவிய போர்க்குணம் கொண்ட மான் கன்றின், கோபத்தைத் தணிவித்து, அதனைத் தனது கையில் ஏந்திய சிவபிரானின், பெருமை வாய்ந்த திருவடியைச் சென்றடைந்து, சிவகணத்துள் ஒருவராக, கருதப்படும் நிலையினை அடைந்து, இறுமாப்புடன் இருப்பேன்.
பாடல் : 12
தேடிக் கண்டு கொண்டேன் - திருமாலொடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை என்னுளே தேடிக் கண்டு கொண்டேன்.
பாடல் விளக்கம்:
திருமாலும் நான்முகனும் தேடியும் காணமுடியாத தேவனைத் தேடி, அவன் என் நெஞ்சத்தினுள்ளே இருக்கின்றான் என்ற செய்தியை அறிந்து கொண்டேன்.
திருச்சிற்றம்பலம்
#திருஅங்கமாலை
#தலையேநீவணங்காய்
#திருநாவுக்கரசர்
#திருமுறை4
#சைவம்
#பதிகவிளக்கம்
#திருப்பதிகம்
#நோய்தீர்க்கும்பாடல்
#எந்தைஈசன்
#enthaieesan
#TamilDevotional
#Thirumurai
#TamilSpiritualVideo
#Tirunavukarasar
Информация по комментариям в разработке