Mathahu News

Описание к видео Mathahu News

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி முரளீஸ்வரனின் தலைமையில் சுக வனிதையர் கிளினிக் தொடர்பான வேலைத்திட்டம் ஒன்றின் ஓர் அங்கமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட “இழப்பேனா உன்னை” எனும் குறும்பட வெளியீட்டு நிகழ்வு சதுர்முகம் கேட்போர் கூடத்தில் 12-11-2024 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சமூக ஆர்வலர் மற்றும் வைத்திய கலாநிதி காந்தா நிரஞ்சன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் கலாரஞ்சனி கணேசலிங்கம், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி முரளீஸ்வரன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் மைதிலி பார்த்லாட், எமது சமூகம் - கனடா ஒருங்கிணைப்பாளர் அஜந்தா ஞானமுத்து, சாம் வேணுகோபால், குடும்பநல வைத்திய நிபுணர் (UK) வைத்தியர் நிரஞ்சன், வைத்தியர் தயானி சசிக்குமார், வைத்தியர் தாஹிரா சம்சுதீன், வைத்தியர் புவனேந்திரநாதன், மட்டு. சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் பேராசிரியை புளோரன்ஸ் பாரதி கென்னடி, மருத்துவ நிர்வாக பதிவாளர் வைத்தியர் மயூரன் நாகலிங்கம், குறும்பட இயக்குனர் குறுந்திரைச் செம்மல் கோடீஸ்வரன் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை உத்தியோகத்தர்கள், தாதியர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.

கருப்பைக் கழுத்து மற்றும் மார்பக புற்று நோய் தொடர்பான இவ் விழிப்புணர்வு குறும்படம் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் குறித்த குறும்படத்திற்கான கதையை வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன் எழுதியுள்ளார். அதற்கான திரைக்கதை மற்றும் வசனங்கள் எழுதி குறுந்திரைச் செம்மல், கோடீஸ்வரன் இயக்கியுள்ளார்.

இவ்வேலைத் திட்டத்திற்கான நிதி அனுசரணையை சமூக ஆர்வலர் மற்றும் வைத்திய கலாநிதி காந்தா நிரஞ்சன் வழங்கியுள்ளார்.

இக்குறும்படத்தில் வைத்தியர் குளோடியா ரதி ஜெயறூபன், வைத்தியர் உதயகுமார், வைத்தியர் பிரஷாந்தி லதாகரன், தீபா தேவசகாயம், தர்மிகா ஸ்ரீகாந்தராசா ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளதுடன் ஒளிப்பதிவை புஸ்பகாந்தும், இசையை சங்கர்ஜனும் மேற்கொண்டுள்ளனர்.

தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டவர்களால் குறும்படத்திற்கான விமர்சனம் வழங்கப்பட்டது.

குறும்பட வெளியீட்டு நிகழ்வில் மாவட்டத்தில் உள்ள 14 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளுக்கும் பிடித்துருத்தி (pendrive) வழங்கிவைக்கப்பட்டதுடன் பிரதம அதிதியாக கலந்துகொண்ட வைத்திய கலாநிதி காந்தா நிரஞ்சன் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டார். அத்தோடு இயக்குநர் கோடீஸ்வரனும் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்விற்கான ஊடக அனுசரணையை மனிதநேயத் தகவல் குறிப்புகள் (மதகு) ஊடகம் வழங்கியது.

Комментарии

Информация по комментариям в разработке