பௌதிகக் கண்களால் காண முடியாத கட்டுப்பாட்டாளர்
“சிக்கலான கணிப்பொறியை கட்டுப்படுத்துவதற்குக் கூட பயிற்சிபெற்ற நபர் தேவைப்படுகிறார். அதுபோன்று, பெரிய இயந்திரமான இந்த பிரம்மாண்டத்தினை உயர்ந்த ஆளுநர் கட்டுப்படுத்துகிறார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஸ்ரீல பிரபுபாதரின், உபதேசங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள இந்த காணொளியில், கடவுள் எவ்வாறு இந்த பிரபஞ்சத்தினைப் படைத்து கட்டுப்படுத்துகிறார் என்பதை நுண்ணிய விளக்கங்களுடன் விளக்க முயன்றுள்ளோம்.
(இது குறித்த ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களை பெற எங்களை தொடர்பு கொள்ள, கீழே உள்ள comment box-ல் எங்களுக்கு எழுதுங்கள்.
இது தொடர்பான பகுதி 1-ன் காணொளியை காண
• Does God Exist-Tamil | கடவுள் இருக்கிறாரா?... என்ற லிங்கிற்கு செல்லவும்)
ஜட சக்தி அல்லது ஜட இயற்கை சுதந்திரமாக செயல்படுவதில்லை. அத்தகைய கருத்து முட்டாள்தனமானது. ஜட இயற்கை சுதந்திரமாக இயங்காது என்று பகவத் கீதையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. முட்டாள் மனிதன் ஓர் இயந்திரத்தைப் பார்க்கும்போது, அது தனிப்பட்ட முறையில் இயங்குவதாக நினைக்கலாம். ஆனால், உண்மை அதுவல்ல. நமது குறைபாடுடைய கண்களால் இயந்திரத்திற்கு பின்னால் இருக்கும் கட்டுப்பாட்டாளரை காண இயல்வதில்லை, எனினும், ஓர் ஓட்டுனர் அல்லது கட்டுப்படுத்தும் நபர் ஒருவர் இருக்கவே செய்கிறார்.
எத்தனையோ மின்னணு இயந்திரங்கள் அற்புதமாக வேலை செய்கின்றன. ஆனால், இந்த சிக்கலான அமைப்பிற்கு பின்னால் ஒரு விஞ்ஞானி மற்றும் அதன் பொத்தானை அழுத்தும் ஒரு ஓட்டுனர் அல்லது கட்டுப்பாட்டாளர் இருக்கவே செய்கின்றனர். இது புரிந்துகொள்வதற்கு மிக எளிமையானது. இயந்திரம் ஜடம் என்பதால் அதனால், சுயமாக வேலை செய்ய இயலாது. அதே சமயம், அதனால், ஓர் ஆன்மீக மேற்பார்வையின் கீழ் இயங்கவியலும். கைப்பேசி, அதனை வடிவமைத்தவரின் திட்டமிடலின் படியும், அதன் பயன்பாட்டாளர் அளிக்கும் கட்டளையின் படியும் இயங்குகின்றது. அந்த கருவி முழுமையானதாக இருக்கலாம், ஆனால் ஓர் உயிர்வாழியினால் கையாளப்படாதவரையில் அதனால் இயங்க இயலாது. அதுபோன்று இந்த அண்ட சராசரத்தில் இயற்கை என்னும் இயந்திரம் உள்ளது, அதன் பின்னர் கடவுள் என்று ஒருவர் இருக்கிறார். இது பகவத் கீதையிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது,
மயாத்யக்ஷேண ப்ரக்ருதி:
ஸூயதே ஸ-சராசரம்
ஹேதுனாநேன கௌந்தேய
ஜகத் விபரிவர்ததே
“குந்தியின் மகனே, எனது சக்திகளில் ஒன்றான இந்த ஜட இயற்கை, எனது மேற்பார்வையில் செயல்பட்டு, அசைகின்ற மற்றும் அசையாதவற்றை எல்லாம் உண்டாக்குகின்றது. அதன் ஆணைப்படி, இந்தத் தோற்றம் மீண்டும் மீண்டும் படைக்கப்பட்டு அழிக்கப்படுகின்றது.” [பகவத் கீதை 9.10]
ஜட இயற்கை தனது வழிகாட்டுதலின்படி இயங்குவதாக கிருஷ்ணர் கூறுகிறார். இப்படியாக அனைத்திற்கும் பின்னணியில் ஓர் உயர்ந்த கட்டுப்பாட்டாளர் உள்ளார். அறிவு பற்றாக்குறையினால் நவீன நாகரிகம் இதனை உணர்வதில்லை. ஜட இயற்கையின் முக்குணங்களால் பைத்தியமாக்கப்பட்டுள்ள இந்த மக்களுக்கு அறிவுபுகட்டுவதே இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தின் நோக்கமாகும். வேறுவகையில் சொன்னால், மனித குலத்தினை அதன் இயற்கை நிலைக்கு எழுப்புவதே அதன் இலக்காகும்.
இலட்சக்கணக்கான கிரகங்கள் வானில் ஒரு பஞ்சைப் போன்று மிதந்து கொண்டுள்ளன. ஒரு வின்கலம் தயாரித்த விஞ்ஞானியை நாம் வெகுவாக பாராட்டுகிறோம்; இவ்வாறு இருக்கையில், வியத்தகு பிரபஞ்சங்களை படைத்தவருக்கு நாம் எவ்வளவு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவிக்க வேண்டும்? தலைசிறந்த கலைஞரையும் தலைசிறந்த விஞ்ஞானியையும் பாராட்டும் இவ்வுணர்வே கிருஷ்ண உணர்வாகும்.
நாம் பல்வேறு கலைஞர்களைப் பாராட்டினாலும் மிகச்சிறந்த கலைஞரான கிருஷ்ணரை பாராட்டவில்லை என்றால், நமது வாழ்வே அர்த்தமாற்றதாகிவிடும். இத்தகைய பாராட்டுதலை பிரபஞ்சத்தைப் படைக்கும் பிரம்ம தேவரின் பிரார்த்தனையான பிரம்ம சம்ஹிதையில் (5.40) நாம் காண்கிறோம். கோடிக்கணக்கான பிரபஞ்சங்களைப் பற்றிய அறிவை பிரம்ம சம்ஹிதையிலிருந்து நாம் பெறுகிறோம்.
யஸ்ய ப்ரபா ப்ரபவதோ ஜகத்-அண்ட-கோடி-
கோடிஷ்வஷேஷ-வஸுதாதி-விபூதி-பின்னம்
தத் ப்ரஹ்ம நிஷ்கலம் அனந்தம் அஷேஷ-பூதம்
கோவிந்தம் ஆதி-புருஷம் தம் அஹம் பஜாமி
கிருஷ்ணரின் உடலிலிருந்து வெளிப்படும் பிரம்ம ஜோதியிலிருந்து எண்ணிலடங்காத பிரபஞ்சங்கள் படைக்கப்படுகின்றன. எண்ணிலடங்காத பிரபஞ்சங்கள், அவற்றிலுள்ள எண்ணிலடங்காத சூரிய, சந்திரன்கள், எண்ணற்ற கிரகங்கள் என அனைத்தும் பிரம்ம ஜோதியிலிருந்தே தோன்றுகின்றன. அந்த பிரம்ம ஜோதி கிருஷ்ணருடைய திருமேனியின் பிரகாசமாகும். தங்களுடைய துளியளவு மூளையைக் கொண்டு அனுமானத்தினால் பரமனை அணுக முயலும் ஞானிகளால் இந்த பிரம்மஜோதியை மட்டுமே அடைய முடியும். பிரம்மஜோதிக்கு ஆதியான கிருஷ்ணரை அடைய முடியாது. சூரிய ஒளியானது இதற்கு ஒரு சிறந்த உவமையாகும். சூரிய ஒளியானது சூரியனிலிருந்து வருகின்றது. சூரியன் ஓரிடத்திலிருந்தாலும், சூரிய ஒளியானது பிரபஞ்சம் முழுவதும் பரவுகின்றது. நிலவானது சூரியனின் ஒளியினைப் பிரதிபலிக்கின்றதைப் போல சூரியனும் பிரம்ம ஜோதியினைப் பிரதிபலிக்கின்றது. அந்த பிரம்ம ஜோதி கிருஷ்ணரது திருமேனி ஒளியாகும்.
பகவத் கீதையில் [10.8] அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்த: ஸர்வம் ப்ரவர்ததே, “நீ காண்பவை அனைத்தும் என்னிடமிருந்தே தோன்றுகின்றன. இருப்பவை அனைத்தும் எனது சக்தியால் படைக்கப்படுபவையே,” என்று கிருஷ்ணர் கூறுகிறார். கிருஷ்ணரே அனைத்திற்கும் மூலாதாரம் என்னும் உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பிரம்ம தேவரும் தமது பிரம்ம சம்ஹிதையில் [5.1] இதனை உறுதிப்படுத்துகிறார்; ஈஷ்வர: பரம: க்ருஷ்ண:. “கிருஷ்ணரே மிகவுயர்ந்த ஆளுநர்.” இந்த பெளதிக உலகில் நாம் பல ஆளுநர்களைக் காண்கிறோம். உண்மையில், நம்மில் ஒவ்வொருவரும் ஆளுநர்களே. நீங்களும் ஓர் ஆளுநர், ஆனால், உங்களுக்கு மேலே மற்றோர் ஆளுநர் இருக்கின்றார், அவருக்கும் மேல் மற்றொருவர் என ஆராய்ந்து கொண்டே போனால், இறுதியில் எவராலும் கட்டுப்படுப்படுத்த முடியாதவரும், அனைவரையும் கட்டுப்படுத்துபவருமான பரம ஆளுநரைக் காண முடியும். அந்த பரம ஆளுநரே பகவான் கிருஷ்ணர்.
Информация по комментариям в разработке