தூத்துக்குடி தருவைமைதானம் உள் விளையாட்டு அரங்கில் இன்று (16.12.2025) உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா 2025 சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் கலந்து கொண்டு விழாப் பேருரை ஆற்றினார். இதனைத் தொடர்ந்து ரூ.54.53 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 206 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு அமைச்சர் வழங்கினார்.
விழாவில் பேசிய அமைச்சர், உலக மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் 3-ஆம் தேதி அனுசரிக்கப்படுவதாகவும், அன்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் சென்னையில் மாநில அளவிலான விழா நடைபெற்றதாகவும் தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மற்றும் அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு பல வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளை நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்து, அதற்கான சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் நினைவூட்டினார். இதன் மூலம் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர். தூத்துக்குடி மாநகராட்சியில் ஆறுமுகம் என்பவர் நியமன கவுன்சிலராக பதவியேற்றுள்ளதுடன், தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகளும் உள்ளனர். மாநகராட்சியில் ஒரு மாற்றுத்திறனாளி பெண் கவுன்சிலராக இருப்பதும் பெருமைக்குரிய விஷயம் என அவர் தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை அவர்களே நேரடியாக நிர்வாகத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் இந்த நியமன கவுன்சிலர் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் அவர்களுக்கான பிரச்சினைகள் எளிதில் தீர்க்க முடியும் என்றும் அமைச்சர் கூறினார். பல்வேறு நலத்திட்டங்களில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்வதாகவும் அவர் வலியுறுத்தினார்.
மாற்றுத்திறனாளி நலத்துறை, 2010 ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் தனித் துறையாக உருவாக்கப்பட்டதாகவும், தற்போதைய முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் TN–Rights திட்டத்தின் கீழ் ஒன்றிய மற்றும் கோட்ட அளவிலான அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். தூத்துக்குடி மாநகராட்சியில் மட்டும் 14 அலுவலர்கள் பணியாற்றி, வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகளை அடையாளம் கண்டு, யாரும் உதவித் தொகை அல்லது உபகரணங்கள் இன்றி விடுபடாமல் பார்த்து வருவதாக அவர் கூறினார்.
வருவாய் துறை மூலம் பட்டா வழங்கும் திட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கான முக்கியமான திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் பகுதிகளில் ஒரே இடத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் பட்டா வழங்கப்பட்டு, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் நிரந்தர கான்கிரீட் வீடுகள் கட்டி வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். கிராமப்புறங்களிலும் இதே திட்டத்தின் மூலம் வீடுகள் கட்டப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும், நடமாட முடியாத 214 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்கின்ற உதவியாளர்களுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இந்த உதவி, குழந்தைகள் மற்றும் கடுமையான மாற்றுத்திறனாளிகளை பராமரிப்பவர்களுக்கு பெரும் துணையாக இருப்பதாக அவர் கூறினார்.
மேலும், மாற்றுத்திறனாளிகளுக்காக நவீன உலகத் தரத்திற்கேற்ற வீல் சேர்கள், மோட்டார் சைக்கிள்கள், பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு லேப்டேப் உள்ளிட்ட கருவிகள் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார். புதிதாக கட்டப்படும் அனைத்து அரசு மற்றும் தனியார் கட்டிடங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதளம் வசதி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளி நலத்துறைக்காக தமிழ்நாடு அரசு ரூ.1852 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், முதலமைச்சர் பொறுப்பேற்ற போது ரூ.600 கோடியாக இருந்த நிதி, தற்போது ரூ.1800 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இது மாற்றுத்திறனாளி நலனில் அரசின் அக்கறையை வெளிப்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளிகள் தன்னம்பிக்கையுடன் சிறு தொழில்கள் தொடங்கி முன்னேற வேண்டும் என அழைப்பு விடுத்த அமைச்சர், அதற்காக அரசு மானியக் கடன்கள் வழங்கப்படுவதாகவும் கூறினார். இன்றைய விழாவில் வழங்கப்படும் உபகரணங்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்தார். விழாவின் முடிவில் அனைவருக்கும் உலக மாற்றுத்திறனாளிகள் தின வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 34 பயனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள், 75 பயனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள், 45 பயனாளிகளுக்கு திறன்பேசிகள், 10 பயனாளிகளுக்கு காதொலிக்கருவிகள், 10 பயனாளிகளுக்கு மடக்கு சக்கர நாற்காலிகள், 2 பயனாளிகளுக்கு மூன்று சக்கர நாற்காலிகள், 10 பயனாளிகளுக்கு சுய வேலைவாய்ப்பு வங்கிக் கடன் மானியம் மற்றும் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற 20 நபர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இதன் மூலம் மொத்தம் ரூ.54,53,815 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் 206 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.மேலும், மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சிறப்பு பள்ளி மாணவ,மாணவியர்களின் கண்கவரும் கலை நிகழ்ச்சிநடப்பட்டது
இந்நிகழ்ச்சியில் மாவட்டமாற்றுத்திறனாளி நல அலுவலர் பிரமநாயகம், மற்றும்பயிற்சியாளர்சிறப்பு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
Информация по комментариям в разработке