முருகப்பெருமானுக்கு உகந்த விரதம் மேற்கொண்டு முருகனை வழிபடுவதால் நமக்கு ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்..
மாதந்தோறும் வரக்கூடிய வளர்பிறை சஷ்டி திதியன்று காலையில் நீராடிவிட்டு, முருகப்பெருமானை தியானித்து, நாம் என்ன கோரிக்கைக்காக விரதம் இருக்கிறோமோ, அந்தக் கோரிக்கையை மனதில் சங்கல்பம் செய்துகொண்டு,
விரதத்தைத் தொடங்க வேண்டும்.
வந்தவினையும் வருகின்ற வல்வினையும்
கந்தன் என்று சொல்லக் கலங்கிடுமே
தென்பழநி சேவகா என்று திருநீர் அணிவார்க்கு
மேவ வாராதே வினை.
என்பது முன்னோர்கள் மொழி. வந்தவினை மட்டுமல்ல வரப்போகும் வினையையும், முன்கூட்டியே தீர்க்கின்ற ஆற்றல் வேலன் வழிபாட்டிற்கு உண்டு.
குறிப்பாக ஐப்பசி மாதம் அமாவாசையை ஒட்டி வரும் கந்த சஷ்டி விரதம், மிகவும் விசேஷமானது. அது மட்டுமல்ல, சிறப்பான பலன்களைத் தரும் ஒப்பற்ற விரதமும் கூட.
ஐப்பசி மாதம் கந்த சஷ்டி தினத்தில்தான் முருகப் பெருமான், தன் அவதாரத்துக்குக் காரணமான சூரபத்மனை சம்ஹாரம் செய்த நிகழ்ச்சி நடந்தது. முருகப் பெருமானின் சூரசம்ஹாரம் தனிச் சிறப்பு கொண்டது.
ஆம். முருகப் பெருமான் சூரனை சம்ஹாரம் செய்ததுடன், அவனையே மயிலாகவும், சேவலாகவும் மாற்றி ஆட்கொண்டார்.
சஷ்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்’ என்பது பழமொழி. இந்தப் பழமொழி நாளடைவில் மருவி ‘சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்’ என்று மாற்றம் பெற்றுவிட்டது.
அதன் உண்மையான விளக்கம் சஷ்டி திதியிலே முருகனுக்கு விரதமிருந்தால், ‘அகப்பை’ எனப்படும் கருப்பையில் குழந்தை உருவாகும் என்பதைக் குறிப்பதாகும்.
குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் இந்த விரதத்தை முறையாக மேற்கொண்டு முருகப்பெருமானை வழிபட்டால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.
சஷ்டியில் ஷண்முகன் தரிசனம் !
ஆறு என்ற எண், முருகப்பெருமானுடன் மிகவும் தொடர்புடையது. அவனது திருமுகங்கள் ஆறு, கார்த்திகை மாதர் அறுவரால் வளர்க்கப்பட்டவன்.அவனது மந்திரம் ஆறெழுத்து சரவண பவ;அவனது இருப்பிடம் அறுபடை வீடுகள், அவனுக்குரிய விரத நாட்களில் சஷ்டி விரதம், மஹா ஸ்கந்த சஷ்டியின் ஆறாம் நாள் சூரசம்ஹாரம் என இப்படியாகப் பல விஷயங்கள் ஆறுமுகனுடன் தொடர்புடையன.
ஸ்ரீ மத் பாம்பன் சுவாமிகள் அருளிச் செய்த குமாரஸ்தவம் என்னும் பாராயண நூலில், இருபத்து ஐந்துவது மந்திரம் ஓம் சஷ்டி பதயே நமோ நம என்பதாகும், சஷ்டி தேவியின் நாயகனாக விளங்கும் சண்முகப் பெருமானுக்கு வணக்கம் என்பது இதன் பொருள்.
சஷ்டிதேவி, தேவசேனைப் பிராட்டியாரின் ஆறில் ஓர் அம்சமாக அவதரித்தவள். அதனால் தேவசேனைக்குரிய சஹஸ்ரநாமத்தில் – ஓம் ஷஷ்ட்யை நம, ஓம் ஷஷ்டீச்வர்யை நம,
ஓம் ஷஷ்டி தேவ்யை நம. எனும் மந்திரங்கள் வருகின்றன. ஆறில் ஓர் அம்சமாகத் தோன்றியதால், இவள் சஷ்டிதேவி என்று அழைக்கப்பெறுகிறாள்.
வேண்டுவன யாவும் தரும் இந்த விரதத்தை எப்படிக் கடைபிடிப்பது?
சஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின் சிந்தனையிலேயே விரதம் இருங்கள்.
அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, அவரவர் வழக்கப்படி நெற்றிக்கு விபூதி, சந்தனம், குங்குமம் இட்டுக்கொள்ளுங்கள். பூஜை அறையில் வழக்கமான இடத்தில் திருவிளக்கினை ஏற்றி, குலதெய்வத்தை மனதார கும்பிடுங்கள்.
பிறகு, பிள்ளையாரிடம் "எனக்கு சஷ்டி விரதம் இருந்ததன் பலன் கிட்ட அருள வேண்டும் விநாயகா" என்று மனதார பிரார்த்தனை செய்யுங்கள். அடுத்து, உங்கள் வீட்டில் உள்ள முருகன் படம் அல்லது சிறிய முருகன் விக்ரகத்தினை எடுத்து கைகளில்
வைத்துக்கொண்டு ஆறுமுகனை அகம் ஒன்றிக் கும்பிட்டு அன்போடு எழுந்தருள வேண்டுங்கள். பின் உங்கள் வசதிக்கு ஏற்றபடி சந்தனம், மஞ்சள், குங்குமம், ஜவ்வாது போன்றவற்றால் முருகனின் படம் அல்லது விக்ரகத்திற்கு பொட்டு வைத்து,
பூப் போட்டு அலங்கரியுங்கள்.
மனம் முழுவதும் அந்த மயில்வாகனனையே நினைத்தபடி கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அனுபூதி, சுப்ரமண்ய புஜங்கம் போன்ற உங்களுக்குத் தெரிந்த துதிகளைச் சொல்லுங்கள். அல்லது கேளுங்கள்.
ஏதும் இயலாதவர்கள் கந்தா சரணம், முருகா சரணம், கார்த்திகை பாலா சரணம் என்று உங்களுக்குத் தெரிந்தபடி சரணங்களைச் சொல்லுங்கள். நிறைவாக தீப ஆராதனை காட்டியபின் இயன்ற நிவேதனம் செய்யுங்கள்.
பாலும், பழமும் இருந்தாலும் போதும். கந்தன் ஒரு எளிய பிரசாதத்தைக் கூட கருணையுடன் ஏற்றுக்கொள்வார். ஆனால் முழுமனதோடு செய்வது முக்கியம். அன்று மாலையில் அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று முருகனை தரிசனம் .
செய்து விரதத்தினை நிறைவு செய்யுங்கள்.
வேலவனின் அருளால் தாம்பத்திய வாழ்வு, சந்ததி, செழிப்பு, ஆரோக்கியம், நீண்ட ஆயுள், புகழ், செல்வம் என்று நீங்கள் வேண்டிய யாவும் நிச்சயம் கைகூடும். நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் வாழ்வில் நிறையும்.
முருகா சரணம் !!! கந்தா சரணம் !!! கார்த்திகை பாலா சரணம் !!
#KandhaSashti #SkandaSashti #MuruganBlessings #Kartikeya #Velavan #SubramanyaSwamy #Shanmukha #DivineWarrior #LordMurugan #Kavadi #KandhaSashtiKavasam #Devotional #Hinduism #Spirituality #BlessingsOfMurugan #KumaraSashti #HastagsForPrayers #KarthikeyaBlessings #SkandaShasti #KandaSashtiFast #MuruganDevotee #DivineGrace #KavadiYatra #SkandaSashtiVratham #KumaraSashtiSpecial #DivineJourney #MuruganAarti
Информация по комментариям в разработке