அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
திருமுறை : ஐந்தாம்-திருமுறை
பண் : திருக்குறுந்தொகை
நாடு :சோழநாடு காவிரி வடகரை
தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)
பாடல்வரிகள்:
அன்னம் பாலிக்குந்
தில்லைச்சிற் றம்பலம்
பொன்னம் பாலிக்கு
மேலுமிப் பூமிசை
என்னம் பாலிக்கு
மாறுகண் டின்புற
இன்னம் பாலிக்கு
மோவிப் பிறவியே.
பின்னணி:
சிவபெருமான் திருவருளால், பெண்ணாகடம் தலத்தில் (அந்நாளில் தூங்கானைமாடம் என்று அழைக்கப்பட்ட தலம்) தனது உடலில் சூலம் மற்றும் இடபக் குறிகள் பொறிக்கப் பெற்ற பின்னர் அப்பர் பிரான் தில்லை வந்தடைந்தார். கூத்தபிரானின் சிரிப்பு, அப்பர் பிரானுக்கு என்று வந்தாய்? என்று இறைவனே நேரில் கேட்பது போன்ற ;உணர்வை ஏற்படுத்த, அதற்கு விடையாக, பத்தனாய் பாடமாட்டேன் என்று தொடங்கும் பதிகத்தினைப் பாடி, அத்தா உன் ஆடல் காண்பதற்காக வந்து கொண்டிருகின்றேன் என்று பதிலளித்தவர், சில நாட்கள் தில்லைப் பதியில் உழவாரப் பணி செய்துவந்தார். அப்பர் பெருமான் செய்த பணியினை திரு என்ற அடைமொழி கொடுத்து, திரு உழவாரம் என்று சேக்கிழார் சிறப்பிப்பதை நாம் பெரிய புராணப் பாடலில் காணலாம்.
சிவபிரான் தன்னுடன் நேரில் பேசி அருளியதால் மிகவும் அகமகிழ்ந்த அப்பர் பிரான், தில்லையில் உழவாரப் பணிகள் செய்த போது பாடிய பதிகம் இது. உள்ளத்தில் இருந்து எழுந்த அன்பொடு செய்யப்பட்ட பணி என்பதால், கண்களிலிருந்து பொழிந்த ஆனந்தக் கண்ணீர், உடலில் பூசப்பட்டிருந்த திருநீற்றுடன் கலந்து வண்டலாக மாறியது என்று சேக்கிழார் கூறுகின்றார்.
சிதம்பரத்தில் அன்னதானம் இன்றும் சிறப்பாக நடைபெறுவதை நாம் காணலாம். அப்பர் பிரான் காலத்திலும் சிறப்பான முறையில் அன்னதானம் நடைபெற்று இருக்கவேண்டும் அதனால் தான் அன்னம் பாலிக்கும் என்று இந்தப் பதிகத்தினை தொடங்குகின்றார் என்று நினைக்கத் தோன்றுகின்றது. தினமும் இறைவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும் கோயில் தில்லைச் சிற்றம்பலம். ஆதிசங்கரர் இங்கே வந்த போது, அன்ன ஆகர்க்ஷண இயந்திரம் நிறுவியதாக கூறுவார்கள். இந்தத் தகவல்களை உணர்த்தும் வகையில் அன்னம் என்ற சொல்லுடன் இந்தப் பதிகம் மிகவும் சிறப்பான முறையில் தொடங்குகின்றது.
விளக்கம்:
பாலிக்கும்=கொடுக்கும்; ஆறு=வழி முறை,
ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகள் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க உறைவிடம் ஆகும். உண்ண உணவு அளிக்கும் தில்லைச் சிற்றம்பலவனார், பொன் அளித்து, உடையும் உறைவிடமும் நமக்கு கிடைக்க வழி செய்கின்றார். இவ்வாறு நமக்கு உதவி செய்யும் ஒருவரை நினைத்தால், நாம் அவரிடத்தில் வைத்துள்ள அன்பு மேலும் மேலும் பெருகுவது இயற்கை தானே. இந்த செய்தி தான் என் அன்பு ஆலிக்குமாறு என்ற சொற்றொடர் மூலம் உணர்த்தப்படுகின்றது.
கருநட்ட கண்டனை என்று தொடங்கும் பதிகத்தில், குனித்த புருவம், கொவ்வைச் செவ்வாய், குமிண் சிரிப்பு, பனித்த சடை, பவளமேனி, பால் வெண்ணீறு, இனித்தம் உடைய எடுத்த பொற்பாதம் என்று ஆடவல்லானின் அழகை நம் கண் முன்னர் கொண்டு வரும் அப்பர் பிரான், இந்த அழகிய தோற்றத்தினைக் காண்பதற்காகவே, மனிதப் பிறவியை நாம் வேண்டலாம் என்று கூறுவது போல், இங்கேயும் நாம் இறைவன் மீது வைத்துள்ள அன்பினை மேலும் வளர்க்கும் இறைவனின் தன்மையை நினைத்தால் மனிதப் பிறவி மறுபடியும் வேண்டும் என்று தோன்றுகின்றது என்று கூறுகின்றார்.
அன்னம் என்பதற்கு வீட்டின்பம் என்று பொருள் கொண்டு, முக்தி அளிக்கும் சிற்றம்பலம் என்று உணர்த்துவதாகவும் கூறுவார்கள். தில்லை காண முக்தி என்பது ஆன்றோர் வாக்கு. தில்லை சென்று நடராஜப் பெருமானை வணங்கினால் நமக்கு முக்தி கிடைக்கும் என்று கூறும் அப்பர் பெருமான், இந்த பிறப்பிலும் சிவபெருமான் நமக்கு செல்வம் அளித்து காப்பாற்றுகின்றார் என்று கூறுகின்றார். இவ்வாறு இம்மையிலும் செல்வம் அளித்து, மறுமையிலும் அழியாத செல்வமாகிய வீடுபேற்றினை அளிக்கும் சிவபிரான் என்று சொல்வது சுந்தரரின் பதிகம் ஒன்றினை நினைவூட்டுகின்றது. இந்த பதிகம் புகலூர் தலத்தின் மீது அருளப்பட்டது. (பதிக எண்: 7.34). ஐயுறவு=சந்தேகம், ஐயம்
#lordshiva #soundsofisha #thevaram #omnamahshivaya #tutorial #trending #carnaticmusic #indianmusicvideos #trending #devotional #tamil #shiva #parvati #sivan #tiruvannamalai #annamalaiyar #thanjavur #kanchipuram #madurai #carnaticmusic
Информация по комментариям в разработке