பதிக பலன் : புதிதாக வீடு கட்டுவோருக்கும், சனிப்பிடியில் இருந்து விலக நனைப்பவருக்கும், வாழ்க்கை நன்முறையில் அமைய பொன் பொருள் வேண்டுவோர் விரும்பி படிக்கும் திருப்பதிகம்.
தல வரலாறு:
சுயம்பு லிங்கமான மூலவருக்கு கோணப்பிரான் என்ற பெயரும் உண்டு. மூலவருக்குப் பக்கத்தில் சந்திரசேகரர் தனிச்சந்நிதி உள்ளது. இங்கு இவரே பிரதானமாவார். கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், நடராசர், தட்சிணாமூர்த்தி, அகத்தியர், லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, பிட்சாடனர் ஆலிங்கனகல்யாண சுந்தரர் முதலிய மூர்த்தங்கள் உள்ளன.மூலவர் சந்நிதிக்கு வடக்கே வர்த்தமானீசுவரர், அவர் துணைவி மனோண்மனிக்கும் தனி சந்நிதிகள் இருக்கின்றன. இந்த வர்த்தமானீசுவரரைப் பாராட்டி சம்பந்தர் தனியாக ஒரு பதிகம் பாடி இருக்கிறார். மூலவரைச் சுற்றி உள்ள உட்பிரகாரத்தில் சந்திரசேகரர், திரிபுராந்தகர், அக்னி, பிரம்மா ஆகியோரின் செப்புச் சிலை வடிவங்களைக் காணலாம். நவக்கிரகங்கள் இங்கு மற்ற கோவில்களில் இருப்பதைப் போல் இல்லாமல் "ட" என்ற அமைப்பில் இருக்கிறார்கள். அனுக்கிரக சனீஸ்வர பகவானும், நளச்சக்கரவத்தியும் ஒரு சன்னதியில் உள்ளனர்.
ஸ்தலத்தின் சிறப்பம்சம்: இத்தலத்தில் அக்னி பகவான் இறைவனை நோக்கி தவம் செய்து பேறு பெற்றிருக்கிறார். அக்னி பூஜித்த தலமாதலால் இறைவனுக்கு அக்னீஸ்வரர் என்ற திருநாமம். அக்னி தவம் செய்யும் போது தன்னைச் சுற்றி ஒரு தீர்த்தம் அமைத்துக் கொள்கிறார். அதுவே கோவில் வெளிப்புறத்தில் அகழியாக, அக்னி தீர்த்தமாக விளங்கிறது.
இத்தலத்து இறைவன் கோணப்பிரான் என்று அழைக்கபடுவதற்கும் காரணம் உண்டு. பாணாசுரன் என்ற அசுரனின் தாயார் சிவபூஜை செய்பவள். தாயாரின் பூஜைக்காக சுயம்பு லிங்கங்களைப் பெயர்த்து எடுத்து வருகிறான் பாணாசுரன். ஆணால் திருப்புகலூர் அக்னீசுவரரை பெயர்த்து எடுக்க முடியாமல் போகவே தன்னையே பலி கொடுக்க முயர்ச்சி செய்யும் போது இறைவன் அவனை தடுத்து ஆட்கொள்கிறார். பாணாசூரன் தோண்டிய அகழியே நாற்புறமும் தீர்த்தமாக உள்ளது. அவன் தாயாரின் பூஜையை இருந்த இடத்தில் இருந்தே ஏற்றுக் கொண்டதின் அடையாளமாக தலை சாய்த்து காட்சி அளிக்கிறார். அதனாலேயே இறைவன் கோணப்பிரான் என்றும் அறியப்படுகிறார்.
இத்தலத்தில் வாஸ்து பூஜை செய்வது மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. இத்தலத்தில் சுந்தரருக்கு செங்கற்களை பொன்கற்களாக மாற்றி கொடுத்து அருளியதாலும் அக்னி பகவான் பாபவிமோசனம் பெற்றதாலும் புதியதாக வீடு கட்டுபவர்கள் இத்தலத்திற்கு வந்து செங்கல் வைத்து மனைமுகூர்த்தம் செய்த பிறகே வீடுகட்ட ஆரம்பிப்பது வழக்கம்.
செங்கற்கள் பொற்கட்டிகளாக மாறியது: திருவாரூரில் பங்குனி விழா ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பாக நடைபெறும். ஒரு சமயம் அவ்வாறு பங்குனி விழாவின் போது தனது மனைவி பரவையார் செலவிற்குப் பொன் பெற விரும்பி சுந்தரர் திருப்புகலூர் வந்தார். திருப்புகலூரில் கோயில் கொண்டுள்ள இறைவனை வணங்கி தனது கருத்தைப் பதிகத்தில் வைத்துப் பாடினார். பிறகு மற்ற அடியார்களுடன் கோவிலில் சிறிது நேரம் இளைப்பாறினார். தூங்குவதற்காக அங்கிருக்கும் செங்கற்களை தலைக்கு உயரமாக வைத்துத் தம் மேலாடையாகிய வெண்பட்டை விரித்துப் படுத்தார். துயில் நீங்கி சுந்தரர் எழுந்தபோது தம் தலையணையாக வைத்திருந்த செங்கற்களெல்லாம் பொற்கட்டிகளாக மாறி இருக்கக் கண்டு வியப்படைந்தார். இறைவனை 'தம்மையே புகழ்ந்து' என்று தொடங்கும் திருப்பதிகம் பாடி வணங்கினார்.
அப்பர் (திருநாவுக்கரசர்) தனது 81-ம் வயதில் இத்தலத்தில் உழவாரப் பணி செய்த போது, இறைவன் சித்திரை சதய நட்சத்திர நாளில் அவருக்கு முக்தி கொடுத்தார். எனவே, இது சதய நட்சத்திர தலமாக விளங்குகிறது. இவருக்கு இக்கோவிலில் தனி சந்நிதியும் இருக்கிறது. சித்திரை சதயத்தை ஒட்டி இவ்வாலயத்தில் பத்து நாள் திருவிழா நடக்கிறது. அப்பர் சித்திரை சதயம் நான்காம் சாமத்தில் இறைவனிடம் ஜோதியாக கலக்கும் நிகழ்ச்சி இப்போது ஐதீகமாக நடத்தப்படுகிறது.
எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனோ?
எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால்
கண்ணிலேன், மற்றோர் களைகண் இல்லேன்,
சுழல் அடியே கைதொழுது காணின் அல்லால்
ஒண்ணுள்ளே ஒன்பது வாசல் வைத்தாய்,
ஒக்க அடைக்கும்போது உணரமாட்டேன்,
புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே
என்று தொடங்கும் பதிகம் பாடிக்கொண்டே அப்பர் இறைவனுடன் ஒரு சித்திரைச் சதய நாளில் இரண்டறக் கலந்து விட்ட சிவஸ்தலம் திருப்புகலூர்.
63 நாயன்மார்களில் ஒருவரான முருக நாயனாருடைய அவதார தலம் திருப்புகலூர். முருக நாயனாருக்கு இத்தலத்தில் சந்நிதி உள்ளது. இத்தலத்திருந்த முருகநாயனார் திருமடத்தில் சம்பந்தர், அப்பர், சிறுத்தொண்டர், திருநீலநக்கர் முதலியோர் கூடியிருந்து மகிழ்ந்த செய்தி பெரிய புராணத்தில் வருகின்றது.
1. பொழிப்புரை:
புலவர்காள், எம் தந்தையாகிய சிவபிரான், தன்னையே பாடுவார்க்கு இம்மையிற்றானே நல்ல உண்டியும், ஆடையும், பிறவும் தந்து புரப்பான் ; அதனால், புகழும் மிகும் ; துன்பங் கெடுதலும் உண்டாம், இவையன்றி இவ்வுடம்பு நீங்கிய நிலையிற்றானே சிவ லோகத்தை ஆளுதல் உளதாம் என்றற்கு, ஐயுறவைத் தருங்காரணம் யாதும் அறுதியாக இல்லை ; ஆதலின், தமக்கு அடிமைகளாய்த் தம்மையே புகழ்ந்து, தமக்கு விருப்பமாயவற்றையே சொல்லி, அதன் மேலும் தம்மையே துணையாகச் சார்ந்து நிற்பினும், அங்ஙனம் சார்ந்தவர்க்கு ஒன்றுந் தருங்குணம் இல்லாத பொய்ம்மையை ஆளுதலையுடைய மக்களைப் பாடுதலை அறவே விடுத்து, அவனது திருப்புகலூரைப் பாடுமின்கள்.
2. பொழிப்புரை:
புலவர்காள், வலியும் வீரமும் இல்லாதவனை பீமனாகவும், வில்லுக்கு வெற்றியையுடைய அருச்சுனனாகவும், கொடுத்தற்குணம் இல்லாதவனை பாரி என்றும் பாடினும், நீவிர் வேண்டுவதை நுமக்குக் கொடுப்பார் இவ்வுலகில் ஒருவரும் இல்லை ; ஆதலின், நீற்றைக்கொண்ட திரு மேனியையுடைய எம் புண்ணிய வடிவினனாகிய சிவபிரானது திருப்புகலூரைப் பாடினால், பல உலக அடுக்கிற்கும் மேல் உள்ள அமரரது உலகத்தை ஆளுதல் உளதாம் என்றற்கு ஐயுறற் காரணம் யாதும் அறுதியாக இல்லை.
Информация по комментариям в разработке