செருகுடி ஸ்ரீதிரிபுரசுந்தரீ சமதே ஸ்ரீ விரூபாக்ஷீஸ்வர சுவாமி: ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம்:
செருகுடி என்று தற்போது அழைக்கப்படும் விருபாக்ஷீபுரத்தில் சுயம்புமூர்த்தியாக எழுந்தருளியுள்ள ஸ்ரீ விருபாக்ஷீஸ்வரரை பூஜித்து ஸ்ரீ சந்திரா பகவான் சாப விமோசனம் அடைந்தார்.
ஸ்தல விருக்ஷம்: வில்வம்
வரலாற்றுப்புகழ்: இக்கோயிலின் தொன்மை, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் இங்கு கண்டெடுக்கப்பட்ட 12ம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டுக்களால் அறியப்படுகிறது.
முதலாம் கல்வெட்டின் வாசகங்கள்:
"ஸ்வஸ்தி ஸ்ரீ" தண்ணாற்றுடைய நாயனார் கோயில் திருக்கற்றளித் திருப்பணி, சோழகுல வல்லி சதுர்வேதி மங்கலத்து அறுநூற்று அறுபத்து நால்வர் திருப்பணி. இது கோவிலின் தென்புறம் வெளிச்சுவற்றில் தக்ஷிணாமூர்த்திக்கு அருகில் அமைந்துள்ளது.
இரண்டாம் கல்வெட்டின் வாசகங்கள்:
"ஸ்வஸ்தி ஸ்ரீ" திரிபுவனச் சக்கரவர்த்தி ஸ்ரீ இராஜ ராஜ என்று முற்றுப் பெறாமல் உள்ளது. இது கோவிலின் பின்புற வெளிச் சுவற்றில் அமைந்துள்ளது. இந்த முதலாம் கல்வெட்டில் செருகுடி "தண்ணூறு" என்று குறிப்பிடபட்டுள்ளது. இங்குள்ள இறைவன் "தண்ணூற்றுடைய நாயனார்" என்று குறிப்பிடபட்டுள்ளார். சுயம்பு மூர்த்தி ஆதலால் அது கால வரம்புக்கு அப்பாற்பட்ட அனாதி ஆனது.
தொன்று தொட்டு இவ்வூர் மக்கள் இம்மூர்த்தியை வணங்கி வந்துள்ளனர்.
மேலும் கலிங்கம் வரை வெற்றிக்கண்டு "சுங்கம் தவிர்த்த சோழன்" என்று பட்டம் பூண்ட முதலாம் குலோத்துங்க சோழன் (1070-1120) தன்தேவியரில் ஒருவரான சோழகுலவல்லியின் பெயரில் கல்வெட்டில் குறித்தபடி "சோழகுலவல்லி சதுர்வேதி மங்கலம்" என்று இந்த பகுதிக்கு பெயரிட்டு அதை நான்கு வேதங்கள் கற்றறிந்த அந்தணர்களுக்கு இங்கு வந்த அக்காலத்திய வழக்கப்படி கையில் நீர்வார்த்து மான்யமாக வழங்கி இருக்க வேண்டும் என்று இக்கல்வெட்டிலிருந்து அறியமுடிகிறது.
அந்த மானியம் பெற்று இங்கு வாழ்ந்து வந்த அந்தணர்கள் 664-வர், 12 ஆம் நூற்றாண்டின் நடுவில் (1150-60) செங்கல்லில் இருந்த கோயிலை கற்றளியில் கட்டினர் என்றும் இந்த கல்வெட்டிலிருந்து அறியமுடிகிறது.
அம்மன் சன்னதி அந்த சமயத்தில் தான் கட்டப்பட்டது என்பது அதன் கட்டுமானத்தில் இருந்து அறியப்படுகிறது. இங்குள்ள பின்னமான எழிலார்ந்த பழைய அம்மன் சிலை சோழர் கால சிற்பக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. க்ஷேத்ர பாலரான பைரவர் சிலையும் அந்த காலத்தைச் சேர்ந்ததாகும்.
இரண்டாம் கல்வெட்டில், சொல்லப்பட்டிருக்கும் "திரிபுவனச் சக்கரவர்த்தி ஸ்ரீ இராஜ ராஜ" என்பது கும்பகோணத்திற்கு அருகில் இருக்கும் தாராசுரம் கோயிலை கட்டிய இராஜ ராஜனைக் (1146-1173) குறிக்கிறது.
அந்த அரசனும் இங்குற்று ஏதோ தானமோ, திருப்பணியோ செய்ய முற்பட்டிருக்கலாம் என்று இந்த முற்று பெறாத கல்வெட்டிலிருந்து அறியப்படுகிறது.
கோயில் அமைப்பு:
இக்கோயிலின் கட்டுமானம் செந்நிறக் கருங்கற்களாலும், செங்கற்களாலும் இணைந்து கட்டப்பட்டுள்ளது. கோயிலின் கருவறை, அர்த்த மண்டபம், தாங்கு தளம் வரை செந்நிறக் கருங்கற்களாலும் அதன் மீது அமைக்கப்பட்டுள்ள விமானம் செங்கற்களாலும் அமைக்கப்பட்டுள்ளது.
இரு தள வட்ட வடிவ விமான அமைப்புடைய இக்கோயிலின் விமானம் திராவிட கலைப்பாணில் கூடுகளையும், சாலைகளையும் பெற்று கிரீவம், சிகரம், தூபி ஆகியவற்றைக் கொண்டு விளங்குகின்றன.
கருவறையின் உள்ளிருந்து விமானத்தின் உச்சியைக் காணதக்க வகையில், இக்கோயிலின் விமான அமைப்பு வெற்றிட விமானமாக கட்டப்பட்டுள்ளது தனி சிறப்பாகும்.
தொல்லியல்துறை ஆராய்ச்சி நிலையத்தாரின் பரிந்துரைப்படி சிதைந்திருந்த கருங்கல்லிற்கு வெளி நாட்டிலிருந்து தருவித்த இரசாயன ஊட்டமும், தண்ணீரை எதிர்க்கும் சக்தியையுடைய இரசாயனமும் பயன்படுத்தப்பட்டுள்ளது. சோழர் காலத்தில், திருக்கோயில் கட்டுவதற்கு பயன்படுத்திய பாரம்பரிய சுண்ணாம்பு கலவைப்பூச்சு இந்த கோயில் திருப்பணியில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.
கும்பாபிஷேகப்பெருமை
********************************
1949ம் ஆண்டு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் 68ம் பீடாதிபதி ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவர் ஸ்ரீ பரமாச்சாரியாரின் திருக்கரங்களால் மஹா கும்பாபிஷேகம் செய்து வைக்க பெற்றது.
இத்திருக்கோயிலில் விய வருஷம் ஆவணி மாதம் 15ம் தேதி (31-8-2006) வியாழக்கிழமை அனுஷ நக்ஷத்திரம், சித்த யோகம், சப்தமி திதியும் கூடிய சுபதினத்தில் காலை 7.35 க்கு மேல் 8.10 க்குள் கன்யா லக்னத்தில், அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள், ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள் அனுகிரஹத்துடன் நடைபெற்றது.
காஞ்சி பெரியவர் விஜயம்:
ஸ்ரீ காஞ்சி காம கோடி பீடத்தின் 69ம் பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள் செப்டம்பர் 13 - 2006, புதன்கிழமை மாலை 5 மணி அளவில் செருகுடியில் உள்ள இந்த திருக்கோயிலுக்கு விஜயம் செய்து, செருகுடி மக்களுக்கு அருளாசி வழங்கினார்.
மண்டலா பூஜை:
01-09-2006 தொடங்கி தொடர்ந்து 45 நாட்கள் மண்டல பூஜை நடைபெற்றது. அக்டோபர் 15,2006 ஞாயிற்றுக்கிழமை, மண்டலாபிஷேகம் இனிதே வெகு விமர்சையாக நடந்தேறியது.
தற்பொழுது:
இத்திருக்கோயில் 11.09.2019 பாலாலயம் செய்யப்பட்டு, வினாயகர், முருகன், அம்பாள், ஸ்வாமி, சண்டிகேஸ்வரர், மஹாலிங்கம், பைரவர், சனீஸ்வரர், சூரியன், சந்திரன் சந்நிதிகள் முழுவதும் தொன்மை மாறா வண்ணம் திருப்பணிகள் செய்யப்பட்டது. மேலும் புதிதாக மடப்பள்ளி, மஹா மண்டபத்தில் (வினாயகர், ஸ்வாமி, அம்பாள்) கட்டப்பட்டு, சார்வரி வருடம் மாசி மாதம் 26-ஆம் தேதி (10.03.2021) புதன் கிழமை திருவோண நக்ஷத்ரம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை மணி 11க்கு மேல் 11.45க்குள் மிதுன லக்னத்தில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் அவர்கள் எழுந்தருளி, முன்னின்று அனுக்ரஹம் செய்ய குருவருளும், திருவருளும் துணை கொண்டு ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
Информация по комментариям в разработке